முகமது ஷமி அர்ஜூனா விருது பெறுவதை அவரது அம்மா நேரில் கண்டு ரசித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு அர்ஜூனா விருது, கேல் ரத்னா விருது, துரோணாச்சார்யா விருது, மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில் கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான அர்ஜூனா விருது, கேல் ரத்னா விருது, துரோணாச்சார்யா விருது, மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதுக்கான வீரர்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டது.
இதில் உலகக் கோப்பையில் சிறந்து விளங்கிய முகமது ஷமி, செஸ் கிராண்ட் மாஸ்டரான வைஷாலி, ஹாக்கியில் சிறந்து விளங்கிய கிரிஷன் பகதூர் பதக், புக்ரம்பம் சுசீலா சானு ஆகியோர் உள்பட 26 வீரர், வீராங்கனைகளுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டது. இதே போன்று தமிழகத்தைச் சேர்ந்த செஸ் பயிற்சியாளர் ஆர்.பி.ரமேஷுக்கு துரோணாச்சார்யா விருதும், தமிழகத்தைச் சேர்ந்த கபடி வீராங்கனை கவிதா செல்வராஜுக்கு வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருதும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தான் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் இந்திய விளையாட்டு விருதுகள் இன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்பு கலந்து கொண்டு வீரர், வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார். இதில் முகமது ஷமிக்கு அர்ஜூன் விருது வழங்கப்பட்டது. இதனை அவரது அம்மா அஞ்சுமா ஆரா நேரில் கண்டு ரசித்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விருது வழங்கப்பட்ட வீடியோவை முகமது ஷமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: இன்று நான் குடியரசுத் தலைவரால் மதிப்புமிக்க அர்ஜுனா விருதைக் கெளரவித்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நான் இங்கு வருவதற்கு நிறைய உதவியவர்கள் மற்றும் எனது ஏற்றத் தாழ்வுகளில் எனக்கு எப்போதும் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன்.
எனது பயிற்சியாளர், பிசிசிஐ, சக வீரர்கள், எனது குடும்பத்தினர், ஊழியர்கள் மற்றும் எனது ரசிகர்களுக்கு நன்றி. எனது கடின உழைப்பை அங்கீகரித்ததற்கு நன்றி. எனது நாட்டை பெருமைப்படுத்த நான் எப்போதும் என்னால் முடிந்ததை வழங்க முயற்சிப்பேன். மீண்டும் அனைவருக்கும் நன்றி. அர்ஜூனா விருது பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.
National Sports Awards 2023: அர்ஜூனா விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி!
