உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்திய அணி இன்று தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இதற்கிடையே, தன்னை பற்றி கடுமையாக விமர்சித்த தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர் ரபாடாவிற்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பதிலடி கொடுத்துள்ளார். 

தென்னாப்பிரிக்க அணிக்கு இது மூன்றாவது போட்டி. இதற்கு முன்னதாக இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக ஆடிய 2 போட்டிகளிலும் தென்னாப்பிரிக்க அணி தோல்வியை தழுவியது. முதல் 2 போட்டிகளிலும் தோற்று படுமோசமாக உலக கோப்பை தொடரை தொடங்கியுள்ள தென்னாப்பிரிக்க அணி, முதல் வெற்றியை பெறும் முனைப்பில் இந்திய அணியை இன்று எதிர்கொள்கிறது. 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக பார்க்கப்படும் இந்திய அணியை வீழ்த்துவது தென்னாப்பிரிக்க அணிக்கு எளிதான காரியம் அல்ல. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வலுவான அணியாக திகழும் அதேவேளையில் தென்னாப்பிரிக்க அணி வலுவிழந்துள்ளது. காயம் காரணமாக அனுபவ ஃபாஸ்ட் பவுலர் டேல் ஸ்டெய்ன் தொடரிலிருந்து விலகியுள்ளார். இங்கிடி காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான போட்டியில் ஆடவில்லை. பவுலிங் தான் தென்னாப்பிரிக்க அணியின் பெரிய பலமாக இருந்த நிலையில், ஸ்டெய்னும் இங்கிடியும் இல்லாதது அந்த அணிக்கு பெரிய இழப்பு. 

எனவே இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்க அணி, ரபாடாவை நம்பியே உள்ளது. இதற்கிடையே, இந்திய அணியின் கேப்டன் கோலியை கடுமையாக சாடியிருந்தார் ரபாடா. கோலி குறித்து பேசிய ரபாடா, கோலி மட்டும் எதிரணி வீரர்களை சீண்டுவார். பதிலுக்கு அவர்கள் சீண்டினால் கோபப்படுவார். கோலி முதிர்ச்சியற்றவர். இதுபோன்ற நபர்களை எனக்கு பிடிக்காது என்று ரபாடா சாடியிருந்தார். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இன்று இந்திய அணி ஆட உள்ள நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய கேப்டன் விராட் கோலியிடம், ரபாடாவின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, ரபாடாவுக்கு எதிராக நான் நிறைய முறை ஆடியிருக்கிறேன். ரபாடா என்னை பற்றி ஏதாவது சொல்லியிருந்தால், அதற்கு செய்தியாளர் சந்திப்பில் பதிலளிக்க நான் விரும்பவில்லை. அப்படி ஏதேனும் சொல்லியிருந்தால் அவரிடம் நேருக்கு நேர் அதுகுறித்து பேசிக்கொள்ளலாம் என்று முதிர்ச்சியாக பதிலளித்தார் விராட் கோலி.