இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-0 என தொடரை வென்றுவிட்டது. இந்நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று தொடங்கியது. 

தொடர்ச்சியாக டாஸ் தோற்றதால் விரக்தியடைந்த தென்னாப்பிரிக்க கேப்டன் டுப்ளெசிஸ், இந்த போட்டியில் டெம்பா பவுமாவை டாஸ் போட அனுப்பிவைத்தார். ஆனால் அவரும் டாஸ் தோற்றார். இந்தியாவில் ஆடும்போது டாஸ் ரொம்ப முக்கியம். ஏனெனில் இரண்டு நாட்களுக்கு மேல் ஆடுகளத்தின் தன்மை மாறி, ஸ்பின்னிற்கு சாதகமாகிவிடும் என்பதால் முதலில் பேட்டிங் ஆடி பெரிய ஸ்கோரை அடித்தால் வெற்றிக்கு அருகில் சென்றுவிடலாம். 

அதனால் டாஸின் முக்கியத்துவத்தை டுப்ளெசிஸ் உணர்ந்திருந்தாலும், அந்த அணியால் ஒரு போட்டியில் கூட டாஸ் ஜெயிக்க முடியவில்லை. இந்த போட்டியிலும் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை ஆடிவருகிறது. ரோஹித் சர்மாவும் மயன்க் அகர்வாலும் தொடக்க வீரர்களாக இறங்கியுள்ளனர்.

போட்டி நடக்கும் ராஞ்சி ஆடுகளம் ஸ்பின்னிற்கு சாதகமானது என்பதால், ஒரு ஃபாஸ்ட் பவுலரை நீக்கிவிட்டு கூடுதலாக ஒரு ஸ்பின்னர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இஷாந்த் சர்மாவிற்கு பிரேக் கொடுத்துவிட்டு, இடது கை ஸ்பின்னர் ஷேபாஸ் நதீம் அணியில் அறிமுகமாகியுள்ளார். இதுதான் அவருக்கு முதல் போட்டி. குல்தீப் யாதவ் அணியில் இருந்தும் கூட, அவர் சேர்க்கப்படாமல் நதீம் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்திய அணி:

ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி(கேப்டன்), ரஹானே(துணை கேப்டன்), ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), ஜடேஜா, அஷ்வின், நதீம், ஷமி, உமேஷ் யாதவ்.