இந்திய அணி முதன்முறையாக வங்கதேசத்துக்கு எதிராக பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆடியது. கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த அந்த போட்டியில், பிங்க் பந்தில் ஆடிய முதல் போட்டியிலேயே இந்திய அணி வங்கதேச அணியை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 

வங்கதேச அணி அதிகம் டி20 போட்டிகளில் ஆடாத அணி. அதுமட்டுமல்லாமல் அனுபவமற்ற அணி என்பதால், அனுபவம் வாய்ந்த மற்றும் சிறந்த வீரர்களை கொண்ட இந்திய அணி, வங்கதேசத்தை எளிதாக வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. எப்படியிருந்தாலும் வெற்றி வெற்றிதான் என்பதால் மாற்று கருத்தில்லை. 

ஆனால் இந்திய அணி 2018 இறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்தபோது, ஒரு போட்டியை பகலிரவு போட்டியாக ஆட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அழைத்தது. ஆனால் இந்திய அணி ஒப்புக்கொள்ளாததால், பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆடமுடியாது என்று பிசிசிஐ தெரிவித்துவிட்டது. 

பிசிசிஐயின் தலைவராக கங்குலி பொறுப்பேற்ற பிறகு, சூழல்கள் மாற தொடங்கியுள்ளன. பிசிசிஐ தலைவரானதுமே பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்தி காட்டினார் கங்குலி. இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும்  பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் ஆட ஆர்வமாகவே உள்ளது.

இதற்கிடையே, இதை வாய்ப்பாக பயன்படுத்தி ,இந்திய அணிக்கும் கேப்டன் கோலிக்கும் சவால் விடுத்திருந்தார் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன். ஆஸ்திரேலியாவில் பகலிரவு டெஸ்ட்டில் ஆடுவது குறித்து விராட் கோலியிடம் கேட்போம். அவர் அதற்கு உடன்பட்டால், பிரிஸ்பேனில் நடக்கும் முதல் போட்டியையே பகலிரவு டெஸ்ட் போட்டியாக ஆடலாம். கோலி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம் என்று டிம் பெய்ன் தெரிவித்திருந்தார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்தபோது, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன் விட்ட சவாலை ஏற்றார். அதுகுறித்து பேசிய கோலி, நாங்கள் எங்கு வேண்டுமானாலும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆட தயாராக உள்ளோம். பிரிஸ்பேனோ அல்லது பெர்த்தோ எங்கு வேண்டுமானாலும் ஆடலாம். எங்களுக்கு அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. எப்பேர்ப்பட்ட அணியையும், எந்த இடத்திலும் எதிர்கொள்ளும் திறமை எங்களிடம் உள்ளது என்று தெரிவித்திருந்தார். 

Also Read - ராகுல் டிராவிட்டுடனான ஒப்பீடு.. மௌனம் கலைத்த புஜாரா

இந்நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு செல்லும் இந்திய அணி, கண்டிப்பாக பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆடும் என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆடுவது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கிறது. அதிகாரப்பூர்வ தகவல் வந்தால்தான் 100% உறுதி.