உலக கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது. 

எஞ்சிய ஒரு இடத்திற்கு இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய 3 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இங்கிலாந்து அணி எஞ்சிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில், இதுவரை தோல்வியையே தழுவாத இந்திய அணியை நாளை எதிர்கொள்கிறது. உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள இரு அணிகளாக பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான நாளைய போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி புதிய ஜெர்சியை அணிந்து ஆடவுள்ளது. இங்கிலாந்து அணியின் ஜெர்சியின் நீல நிறம் என்பதால், அதிலிருந்து வேறுபடுத்தி காட்டுவதற்காக இந்திய அணி ஆரஞ்சு-நீல நிற கலவையிலான ஜெர்சியை அணிந்து ஆடவுள்ளது. 

இந்த ஜெர்சியை இந்திய அணியின் அதிகாரப்பூர்வ ஜெர்சி ஸ்பான்ஸரான நைகி நிறுவனம் வடிவமைத்து கொடுத்துள்ளது. எட்ஜ்பாஸ்டனில் நடக்கவுள்ள நாளைய போட்டியில் இந்திய அணி புதிய ஜெர்சியில் ஆடவுள்ளது.