வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரின் கடைசி போட்டியிலும் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது இந்திய அணி.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வென்று இந்திய அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், மூன்றாவது போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 146 ரன்கள் அடித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் பொல்லார்டை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. தீபக் சாஹர் ஆரம்பத்திலேயே வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட்டுகளை சரித்து அந்த அணிக்கு நடுக்கத்தை ஏற்படுத்திவிட்டார். 

சுனில் நரைன், லீவிஸ், ஹெட்மயர் ஆகிய மூவரையும் தனது முதல் இரண்டு ஓவர்களிலேயே வீழ்த்திவிட்டார். 14 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியை பொல்லார்டுதான் சரிவிலிருந்து மீட்டார். பூரான், பிராத்வெயிட் ஆகியோரும் சோபிக்கவில்லை. பொறுப்புடனும் அதேநேரத்தில் அதிரடியாகவும் ஆடிய பொல்லார்டு, 45 பந்துகளில்  ஒரு பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களுடன் 58 ரன்களை குவித்தார். ரோவ்மன் பவலும் ஓரளவுக்கு ஆடி தன் பங்கிற்கு 32 ரன்களை சேர்த்து கொடுத்தார். இதையடுத்து 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 146 ரன்கள் அடித்தது. 

147 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் தவான் மற்றும் ராகுல் ஆகிய இருவருமே சோபிக்கவில்லை. 27 ரன்களுக்கே இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் கோலியும் ரிஷப் பண்ட்டும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர். இருவருமே அரைசதம் கடந்தனர். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 106 ரன்களை குவித்தது. கோலி 59 ரன்களில் ஆட்டமிழக்க, பண்ட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 65 ரன்களை குவித்தார். கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் விளாசி போட்டியை வெற்றிகரமாக முடித்து கொடுத்தார் ரிஷப் பண்ட். 

3 ஓவர்கள் வீசி வெறும் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய தீபக் சாஹர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.