இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடியது. 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து வென்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரையும் 2-0 என வென்றுள்ளது. 

முதல் டெஸ்ட் போட்டியில் 318 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, இரண்டாவது டெஸ்ட்டில் 257 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது. 

இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ஹனுமா விஹாரியின் அபார சதம் மற்றும் விராட் கோலி, மயன்க் அகர்வால், இஷாந்த் சர்மா ஆகியோரின் பொறுப்பான அரைசதத்தால் முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட்  இண்டீஸ் அணி, இந்திய அணியின் ஃபாஸ்ட் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை இழந்து, மூன்றாம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு முன்பாகவே, 117 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. 

299 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 4 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் அடித்திருந்த நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இந்திய அணி மொத்தமாக 467 ரன்கள் முன்னிலை பெற்றதால் 468 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிவரும் வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்றாம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் அடித்திருந்தது. 

நான்காம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் பும்ரா வீசிய பந்தில் டேரன் பிராவோவிற்கு காயம் ஏற்பட்டதால் ரிட்டயர்ட் ஹர்ட் ஆகி சென்றார். இதையடுத்து ப்ரூக்ஸுடன் சேஸ் ஜோடி சேர்ந்தார். ஆனால் ப்ரூக்ஸ் - சேஸ் ஜோடியால் பார்ட்னர்ஷிப் அமைக்க முடியவில்லை. சேஸ் 12 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த ஹெட்மயர், வெறும் ஒரு ரன்னில் இஷாந்த் சர்மாவின் பந்தில் ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் ப்ரூக்ஸுக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஓரளவிற்கு நன்றாக ஆடிக்கொண்டிருந்த ப்ளாக்வுட், 38 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து அரைசதம் அடித்த சேஸும் ஆட்டமிழந்தார்.  ப்ரூக்ஸின் விக்கெட்டுக்கு பிறகு ஹாமில்டன், கார்ன்வால் ஆகியோர் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழக்க, கடைசி விக்கெட்டாக கேப்டன் ஹோல்டரும் 39 ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணி 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரை 2-0 என வென்றது. 

மேலும் வெஸ்ட் இண்டீஸை 2 டெஸ்ட் போட்டிகளிலும் வீழ்த்தியதால், ஒரு வெற்றிக்கு தலா 60 புள்ளிகளுடன் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது இந்திய அணி.