ரோஹித் சர்மா - விராட் கோலி ஜோடி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இன்னும் 94 ரன்கள் அடித்தால், சச்சின் - கங்குலி ஜோடியுடன் சாதனை பட்டியலில் இணைவார்கள். 

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் வரும் 6ம் தேதி தொடங்குகிறது. வரும் 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கவுள்ளன.

ரோஹித் சர்மாவின் முழு நேர கேப்டன்சியின் கீழ் இந்திய அணி ஆடவுள்ள முதல் தொடர் இது. ரோஹித் காயத்திலிருந்து மீண்டு ஃபிட்னெஸை பெற்று மீண்டும் இந்திய அணியில் ஆடவுள்ளார். 2 ஆண்டுகளாக சதமடிக்க முடியாமல் திணறும் விராட் கோலியிடமிருந்தும் பெரிய சதம் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த தொடர் இருவருக்குமே முக்கியமான தொடராக இருக்கும்.

இந்த தொடரில் ரோஹித் - கோலி ஜோடி சில சாதனை பட்டியலில் இணைய வாய்ப்புள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் - கோலி ஜோடி 81 இன்னிங்ஸ்களில் 64.55 என்ற சராசரியுடன் 4906 ரன்களை குவித்துள்ளது. இன்னும் 94 ரன்கள் அடித்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் 5000 ரன்களை குவித்த 3வது இந்திய ஜோடி என்ற சாதனையை படைக்கும் ரோஹித் - கோலி ஜோடி.

சச்சின் - கங்குலி இணைந்து ஒருநாள் கிரிக்கெட்டில் 176 இன்னிங்ஸ்களில் 8227 ரன்களை குவித்துள்ளனர். அதற்கடுத்த இடத்தில் ரோஹித் - தவான் ஜோடி உள்ளது. 112 இன்னிங்ஸ்களில் 5023 ரன்களை குவித்துள்ளனர் ரோஹித் - தவான். எனவே இன்னும் 94 ரன்கள் அடித்தால் இந்த பட்டியலில் ரோஹித் - கோலி இணைந்துவிடும்.

மேலும், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ரோஹித்தும் கோலியும் இணைந்து 982 ரன்களை குவித்துள்ளனர். இன்னும் 18 ரன்கள் அடித்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் 2 அணிகளுக்கு எதிராக 1000 ரன்களை கடந்த ஜோடி என்ற பெருமையையும் ரோஹித்-கோலி ஜோடி பெறும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் இருவரும் இணைந்து 1128 ரன்களை குவித்துள்ளனர்.