இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டி20 போட்டிகளை காண பார்வையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் ஒருநாள் தொடரும் அதைத்தொடர்ந்து டி20 தொடரும் நடக்கவுள்ளது.

வரும் பிப்ரவரி 6, 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்திலும், பிபவரி 16, 18, 20 ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும் நடக்கவுள்ளன.

அகமதாபாத்தில் நடக்கும் ஒருநாள் தொடரில் பார்வையாளர்கள் அனுமதியில்லை என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுவிட்டது. கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கும் 3 டி20 போட்டிகளை காண 75 சதவிகித பார்வையாளர்களுக்கு மேற்கு வங்க அரசு அனுமதியளித்திருந்தது.

ஆனால் இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர், நவ்தீப் சைனி உள்ளிட்ட வீரர்களுக்கும், பயிற்சியாளர், ஃபிசியோ தெரபிஸ்ட் என சிலருக்கும் கொரோனா உறுதியானது.

எனவே ஈடன் கார்டனில் நடக்கும் டி20 போட்டிகளை காண ரசிகர்களை அனுமதிப்பது பாதுகாப்பானது அல்ல என்பதால் ஈடன் கார்டனில் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்று பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.

வீரர்களின் பாதுகாப்பு விஷயத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. எனவே டி20 போட்டிகளை காண ஈடன் கார்டனில் பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துவிட்டார்.

மீண்டும் ஸ்டேடியத்திற்கு சென்று நேரடியாக கிரிக்கெட் போட்டிகளை காணும் ஆர்வத்தில் இருந்த ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றமாக அமைந்துவிட்டது.