இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 92 ரன்னில் ரன் அவுட்டான ஷ்ரேயாஸ் ஐயர், சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோர் இடம்பெற்ற பட்டியலில் இணைந்தார்.
ஷ்ரேயாஸ் ஐயர் அபாரம்:
இந்தியா - இலங்கை இடையேயான 2வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடந்துவரும் நிலையில், இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 252 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி வெறும் 109 ரன்களுக்கு சுருண்டது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணியில் ரோஹித் சர்மா (15), மயன்க் அகர்வால் (4), ஹனுமா விஹாரி(31), விராட் கோலி(23), ரிஷப் பண்ட் (39), ஜடேஜா (4), அஷ்வின் (13) ஆகிய அனைத்து வீரர்களுமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடினார். களத்தில் நிலைத்து நின்று ஆடியது மட்டுமல்லாது, பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் 98 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 92 ரன்களை குவித்து ஸ்டம்பிங் ஆகி அவுட்டானார்.
சச்சின், சேவாக்குடன் இணைந்தார் ஷ்ரேயாஸ் ஐயர்:
92 ரன்னில் ஸ்டம்பிங் ஆன ஷ்ரேயாஸ் ஐயர், சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக் ஆகியோர் இடம்பெற்றுள்ள பட்டியலில் இணைந்தார். அதாவது, டெஸ்ட் கிரிக்கெட்டில் 90 ரன்களை கடந்து ஸ்டம்பிங் மூலம் அவுட்டான 4வது இந்திய வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் ஆவார்.
இதற்கு முன், 2001ல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் சச்சின் டெண்டுல்கர் 90 ரன்னிலும், 2010ல் இலங்கைக்கு எதிரான கொழும்பு டெஸ்ட்டில் வீரேந்திர சேவாக் 90 ரன்னிலும், 1987ல் சென்னையில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்டில் திலீப் வெங்சர்க்கார் 96 ரன்னிலும் ஸ்டம்பிங் மூலம் அவுட்டானார்கள். அந்த வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயரும் இணைந்துள்ளார்.
