அக்டோபர் 18ம் தேதி தொடங்குவதாக இருந்த டி20 உலக கோப்பையை ஓராண்டுக்கு ஒத்திவைத்துள்ளது ஐசிசி. 2021 அக்டோபர் - நவம்பரில் டி20 உலக கோப்பை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

டி20 உலக கோப்பையை ஐசிசி ஒத்திவைத்துள்ளதால், அக்டோபர் - நவம்பரில் ஐபிஎல்லை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் 26 முதல் நவம்பர் முதல் வாரம் வரையிலான காலக்கட்டத்தில் ஐபிஎல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஐபிஎல் நிர்வாகக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். 

ஐபிஎல்லை சர்வதேச வீரர்கள் அனைவரும் எதிர்நோக்கி காத்திருந்த நிலையில், ஐபிஎல் நடப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், அதற்கு முன்னதாக இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான டி20 தொடர் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஐபிஎல்லுக்கு முன் ஒரு சர்வதேச தொடரில் இந்திய அணி ஆடினால் நன்றாக இருக்கும் என பிசிசிஐ கருதுகிறது. ஆனால் ஐபிஎல் அணிகள் அதை விரும்பவில்லை. கிரிக்கெட் வீரர்கள் மார்ச்சிலிருந்து எந்த விதமான போட்டியிலும் ஆடவில்லை. எனவே ஐபிஎல்லுக்கு முன் ஒரு தொடரில் ஆடினால், வீரர்களுக்கும் பயிற்சியாக அமையும் என்பதால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான டி20 தொடர் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அந்த தொடர், ஐபிஎல்லுக்கு முன் நடத்தப்படலாம் என தெரிகிறது. ஆனால் எங்கு, எப்போது என்பது குறித்த தகவல்களோ அதிகாரப்பூர்வ தகவல்களோ எதுவும் வெளிவரவில்லை.