Asianet News TamilAsianet News Tamil

IND vs NZ இந்தியாவின் வெற்றியை தடுத்த இந்திய வம்சாவழி வீரர்கள்..! பரபரப்பான முதல் டெஸ்ட் டிராவில் முடிந்தது

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
 

india vs new zealand first test drawn
Author
Kanpur, First Published Nov 29, 2021, 4:35 PM IST

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 25ம் தேதி தொடங்கி கான்பூரில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்கள் அடித்தது.

முதல் இன்னிங்ஸில் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ஷுப்மன் கில் அரைசதம் அடித்தார். ஆனால்  பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் 52 ரன்னில் ஆட்டமிழந்தார் கில். புஜாரா 26 ரன்னில் ஆட்டமிழக்க, கேப்டன் ரஹானே 35 ரன்னில் ஆட்டமிழந்தார். தனது முதல் டெஸ்ட்டில் ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர், அறிமுக டெஸ்ட்டில் அபாரமாக ஆடி சதமடித்தார். அறிமுக டெஸ்ட் இன்னிங்ஸில் சதமடித்ததன் மூலம் சாதனையாளர்கள் பட்டியலில் இணைந்தார் ஷ்ரேயாஸ் ஐயர்.

இக்கட்டான நிலையில் இருந்த இந்திய அணியை ஷ்ரேயாஸ் ஐயருடன் இணைந்து ரவீந்திர ஜடேஜா காப்பாற்றினார். ஷ்ரேயாஸுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடிய ஜடேஜா அரைசதம் அடித்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 105 ரன்னிலும், ஜடேஜா 50 ரன்னிலும் ஆட்டமிழக்க, பின்வரிசையில் அஷ்வின் அவர் பங்கிற்கு 38 ரன்கள் அடித்தார். இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 345 ரன்கள் அடித்தது இந்திய அணி.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டாம் லேதம் மற்றும் வில் யங் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக ஆடி சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 151 ரன்களை குவித்து கொடுத்தனர். வில் யங் 89 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அவரைத்தொடர்ந்து சீனியர் வீரர்களான வில்லியம்சன் (18) மற்றும் ரோஸ் டெய்லர் (11) ஆகிய இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

ஹென்ரி நிகோல்ஸை 2 ரன்னில் வீழ்த்திய அக்ஸர் படேல், டாம் லேதமை 95 ரன்னில் வீழ்த்தி சதமடிக்க விடாமல் தடுத்தார். அதன்பின்னர் டாம் பிளண்டெல் (13) மற்றும் டிம் சௌதி (5) ஆகிய இருவரையும் அக்ஸர் வீழ்த்த, ஜாமிசன் (23), சோமர்வில் (6) ஆகிய இருவரையும் அஷ்வின் வீழ்த்த முதல் இன்னிங்ஸில் 296 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணி சார்பில் அக்ஸர் படேல் 5 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

49 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 51 ரன்களுக்கே கில் (1), மயன்க் அகர்வால் (17), புஜாரா (22), ரஹானே (4), ஜடேஜா (0) ஆகிய 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயரும் அஷ்வினும் இணைந்து சிறப்பாக ஆடி 6வது விக்கெட்டுக்கு 52 ரன்களை சேர்த்தனர். அஷ்வின் 32 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயரும் ரிதிமான் சஹாவும் இணைந்து சிறப்பாக ஆடினர். அறிமுக டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் சதமடித்த ஷ்ரேயாஸ் ஐயர், 2வது இன்னிங்ஸிலும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்து இக்கட்டான நிலையிலிருந்த இந்திய அணியை காப்பாற்றினார். 65 ரன்களில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்க, அதன்பின்னர் சஹாவும் அக்ஸர் படேலும் இணைந்து சிறப்பாக ஆடினர். கழுத்து வலியால் முதல் இன்னிங்ஸில் விக்கெட் கீப்பிங் செய்யாத ரிதிமான் சஹா, கழுத்து வலியுடன் வந்து 2வது இன்னிங்ஸில் பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். ரிதிமான் சஹா 61 ரன்களும், அவருடன் இணைந்து சிறப்பாக ஆடிய அக்ஸர் படேல் 28 ரன்களும் அடித்திருந்த நிலையில், இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் அடித்த நிலையில் டிக்ளேர் செய்தது.

முதல் இன்னிங்ஸில் 49 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, மொத்தமாக 283 ரன்கள் முன்னிலை பெற்று, 284 ரன்கள் என்ற கடின இலக்கை நியூசிலாந்துக்கு நிர்ணயித்தது. 

4ம் நாள் ஆட்டத்தின் கடைசி 4 ஓவர்கள் எஞ்சிய நிலையில், 2வது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் வில் யங்கை வெறும் 2 ரன்னில் 3வது ஓவரில் வீழ்த்தினார் அஷ்வின். இதையடுத்து நைட் வாட்ச்மேனாக வில் சோமர்வில் இறக்கப்பட்டார். கடைசி நாளான இன்றைய ஆட்டத்தை டாம் லேதமும் வில் சோமர்வில்லும் தொடர்ந்தனர். நைட் வாட்ச்மேனாக இறங்கிய சோமர்வில்லை இன்றைய ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே விரைவில் வீழ்த்திவிடலாம் என்று நினைத்தால், 110 பந்துகள் பேட்டிங் ஆடி நேரத்தை கடத்தியதுடன், கிட்டத்தட்ட முதல் செசன் முழுவதுமாக ஆடி இந்தியாவிற்கு நெருக்கடி கொடுத்தார் சோமர்வில். ஒருவழியாக சோமர்வில்லை 36 ரன்களில் உமேஷ் யாதவ் வீழ்த்தினார்.

அரைசதம் அடித்த டாம் லேதமை 2வது செசனில் 52 ரன்களுக்கு அஷ்வின் வீழ்த்த, அதன்பின்னர் வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்த ரோஸ் டெய்லர், ரன்னே அடிக்க முடியாமல் பந்தை கடத்தினார். வில்லியம்சன் - ரோஸ் டெய்லர் அணுகுமுறை, அவர்கள் டிராவிற்காகத்தான் ஆடுகிறார்கள் என்பதை காட்டியது. ஆனாலும் இந்திய அணியின் வெற்றிக்கு விக்கெட்டுகள் தேவை என்ற நிலையில், மிகவும் கவனமாக ஆடியபோதிலும், இந்த ஜோடியை பிரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய அணிக்கு, டீ பிரேக்கிற்கு முந்தைய கடைசி ஓவரின் முதல் பந்திலேயே ரோஸ் டெய்லரை(2) ஜடேஜா வீழ்த்தினார்.

கடைசி நாளான இன்றைய ஆட்டத்தின் டீ பிரேக்கின்போது, 4 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் அடித்திருந்தது நியூசிலாந்து அணி. இதையடுத்து கடைசி செசனில் இந்தியாவின் வெற்றிக்கு 6 விக்கெட்டுகள் தேவைப்பட்ட நிலையில், ஹென்ரி நிகோல்ஸை ஒரு ரன்னில் அக்ஸர் படேலும், டாம் பிளண்டெலை 2 ரன்னில் அஷ்வினும் வீழ்த்த, ஜாமிசன் மற்றும் சௌதி ஆகிய இருவரையும் ஜடேஜா வீழ்த்த, 89.2 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்தது நியூசிலாந்து அணி.

ஆனால் கடைசி விக்கெட்டுக்கு ராச்சின் ரவீந்திராவும் அஜாஸ் படேலும் இணைந்து மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடினர். இந்திய வம்சாவழியை சேர்ந்த இவர்கள் இருவரும் இந்தியாவிற்கு எதிராக அருமையாக பேட்டிங் ஆடினர். அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகிய மூவரும் மாறி மாறி பந்துவீசியும் கூட, அவர்களின் பந்துவீச்சை மிகத்திறமையாக ரவீந்திராவும் அஜாஸ் படேலும் எதிர்கொண்டனர். இந்திய வம்சாவழியை சேர்ந்த ராச்சின் ரவீந்திரா, அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே நியூசிலாந்து அணியை தோல்வியிலிருந்து காப்பாற்றினார்.

கடைசி விக்கெட்டுக்கு 9 ஓவர்கள்  பேட்டிங் ஆடி, கடைசி விக்கெட்டை வீழ்த்தவிடாமல், நியூசிலாந்து அணி போட்டியை டிரா செய்ய உதவினர் ராச்சின் ரவீந்திரா மற்றும் அஜாஸ் படேல். இதையடுத்து முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios