இந்தியா மற்றும் வங்கதேச அண்டர் 19 அணிகள் இங்கிலாந்துக்கு சென்று முத்தரப்பு தொடரில் ஆடியது. 

இந்த தொடரின் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அண்டர் 19 அணிகள் மோதின. வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர் தன்சித் ஹசன் 26 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் மற்றொரு தொடக்க வீரரான பர்வீஸ் ஹுசைனும் மூன்றாம் வரிசை வீரரான மஹ்முதுல் ஹசன் ஜாயும் இணைந்து சிறப்பாக ஆடினர். 

சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த பர்வீஸ் ஹுசைன் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மஹ்முதுல் ஹசன் ஜாய் அபாரமாக ஆடி சதமடித்தார். 109 ரன்கள் குவித்து அவர் ஆட்டமிழக்க, அதன்பின்னர் வந்த வீரர்கள் யாருமே சரியாக ஆடவில்லை. இதையடுத்து அந்த அணி 50 ஓவரில் 261 ரன்கள் அடித்து ஆல் அவுட்டானது. 

262 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் டாப் 3 வீரர்களுமே சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர். ஜைஸ்வால் 50 ரன்களும், சக்ஸேனா 55 ரன்களும் கேப்டன் பிரியம் கார்க் 73 ரன்களும் குவித்தனர். நான்காம் வரிசை வீரரான ப்ரக்னேஷ் மட்டும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். த்ருவ் ஜுரேலும் அரைசதம் அடிக்க, இந்திய அணி 49வது ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்திய அணியில் பேட்டிங் ஆடிய 6 வீரர்களில் 4 பேர் அரைசதம் அடித்ததால் இந்திய அணியின் வெற்றி எளிதானது. இறுதி போட்டியில் வென்றும் முத்தரப்பு தொடரையும் வென்றது இந்திய அணி.