ஷிகர் தவானின் 18 ஆண்டுகால சாதனையை தகர்த்துள்ளார் இந்தியா அண்டர் 19 வீரர் ராஜ் பவா. 

அண்டர் 19 உலக கோப்பை வெஸ்ட் இண்டீஸில் நடந்துவருகிறது. இந்தியா மற்றும் உகாண்டா அண்டர் 19 அணிகளுக்கு இடையே டிரினிடாட்டில் நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா அண்டர் 19 அணி, ரகுவன்ஷி (144) மற்றும் ராஜ் பவா (162) ஆகிய இருவரின் அபார சதத்தால் 50 ஓவரில் 405 ரன்களை குவித்தது. 406 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய உகாண்டா அண்டர் 19 அணி 79 ரன்களுக்கே சுருண்டதையடுத்து, இந்தியா அண்டர் 19 அணி 326 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் இந்தியா அண்டர் 19 மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ராஜ் பவா அதிரடியாக ஆடி 108 பந்தில் 14 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 162 ரன்களை குவித்து சாதனை படைத்தார். இதுதான் அண்டர் 19 உலக கோப்பையில் இந்திய வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோர்.

இதற்கு முன்பாக 2004ல் நடந்த அண்டர்19 உலக கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக ஷிகர் தவான் அடித்த 155 ரன்கள் தான், அண்டர் 19 உலக கோப்பையில் இந்திய வீரர் அடித்த அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. 18 ஆண்டுகால தவானின் இந்த ரெக்கார்டை தகர்த்துள்ளார் ராஜ் பவா.