இந்திய அணி தென்னாப்பிரிக்காவை டெஸ்ட் தொடரில் ஒயிட்வாஷ் செய்த உற்சாகத்தில் உள்ள நிலையில், அடுத்ததாக வங்கதேச அணியுடன் மோதுகிறது. 

வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடவுள்ளது. இந்த தொடருக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அதனால் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படவுள்ளார். ரோஹித் தலைமையிலான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றுள்ளர். உள்நாட்டு போட்டிகள் மற்றும் இந்தியா ஏ அணியில் தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவரும் நிலையில், அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பளிக்க வேண்டும் என கம்பீர் தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தார். 

விஜய் ஹசாரே தொடரில் ஒரு இரட்டை சதத்தையும் அடித்து, தன்னை நிராகரிக்க முடியாத சூழலை ஏற்படுத்தினார் சஞ்சு சாம்சன். ஒருவழியாக இந்திய அணியில் இடம்பிடித்துவிட்டார். அதேபோல மும்பையை சேர்ந்த மற்றொரு இளம் வீரரான ஷிவம் துபேவிற்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது. அவரும் மிக திறமையான வீரர். ஃபாஸ்ட் பவுலிங்கும் வீசக்கூடிய ஆல்ரவுண்டர் துபே. 

இவர்கள் தவிர மற்றவர்கள் ஏற்கனவே இந்திய டி20 அணியில் இருந்தவர்கள் தான். நவ்தீப் சைனிக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. சாஹல் மீண்டும் டி20 அணியில் இணைந்துள்ளார். ஆனால் குல்தீப்பிற்கு இடம் கிடைக்கவில்லை. ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் மற்றும் கலீல் அகமது ஆகியோர் ஃபாஸ்ட் பவுலர்களாக எடுக்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா இந்த தொடரில் ஆடவில்லை. 

இந்திய டி20 அணி:

ரோஹித் சர்மா(கேப்டன்), ஷிகர் தவான், கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், க்ருணல் பாண்டியா, சாஹல், ராகுல் சாஹர், தீபக் சாஹர், கலீல் அகமது, ஷிவம் துபே, ஷர்துல் தாகூர்.