இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் அந்த அணியின் முதல் விக்கெட்டையே வீழ்த்தமுடியாமல் இந்திய பவுலர்கள் திணறிவருகின்றனர். 

இந்தியா - இங்கிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டி லீட்ஸில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா(19) மற்றும் அஜிங்க்யா ரஹானே(18) ஆகிய இருவர் மட்டுமே இரட்டை இலக்க ரன்னே அடித்தனர். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்திலோ அல்லது ரன்னே அடிக்காமலோ ஆட்டமிழந்தனர். கேஎல் ராகுல் முதல் ஓவரிலேயே டக் அவுட்டாகி விக்கெட் வீழ்ச்சியை தொடங்கிவைத்தார்.

அவரைத்தொடர்ந்து புஜாரா(1), கோலி(7), ரஹானே(18), ரிஷப் பண்ட்(2), ரோஹித்(19), ஜடேஜா(4), ஷமி(0), பும்ரா(0), சிராஜ்(3) ஆகிய அனைவரும் சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக ஆட்டமிழந்ததையடுத்து, இந்திய அணி வெறும் 78 ரன்களுக்கே முதல் இன்னிங்ஸில் சுருண்டது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கி ஆடிவரும் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஹசீப் ஹமீதும் ரோரி பர்ன்ஸும் இணைந்து அருமையாக ஆடி மிகச்சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்துள்ளனர்.

ஹமீதும் பர்ன்ஸும் ஆக்ரோஷமாக தொடங்கினர். தொடக்கம் முதலே அடித்து ஆடி சீரான வேகத்தில் ஸ்கோரை உயர்த்தியதுடன், விக்கெட்டையும் இழந்துவிடாமல் கவனமாகவும் தெளிவாகவும் ஆடினர். பும்ரா, ஷமி, இஷாந்த், சிராஜ் ஆகியோரின் பவுலிங்கை திறம்பட எதிர்கொண்டு ஆடிவருகின்றனர்.

இந்திய அணி 41வது ஓவரிலேயே வெறும் 78 ரன்களுக்கு ஆல் அவுட்டே ஆகிவிட்ட நிலையில், இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 32 ஓவர்களில் 86 ரன்களை அடித்துள்ளது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களின் சிறப்பான பேட்டிங்கால் நல்ல தொடக்கம் கிடைத்துள்ளது. இந்திய அணி முதல் விக்கெட்டையே வீழ்த்த முடியாமல் திணறிவருகிறது.