வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் அடைந்த வெற்றிக்கு பிறகு, இந்திய அணியின் இளம் வீரர் வெங்கடேஷ் ஐயரை வெகுவாக புகழ்ந்துள்ளார் கேப்டன் ரோஹித் சர்மா.
வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என அந்த அணியை ஒயிட்வாஷ் செய்து வென்ற இந்திய அணி, டி20 தொடரையும் 2-0 என வென்றுள்ளது. நேற்று நடந்த 2வது டி20 போட்டியில் 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என தொடரை வென்றது. கடைசி டி20 போட்டி நாளை(20ம் தேதி) கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கிறது.
2வது டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடியது. விராட் கோலி மற்றும் ரிஷப் பண்ட்டின் அதிரடி அரைசதம், வெங்கடேஷ் ஐயரின் காட்டடி ஃபினிஷிங், ஹர்ஷல் படேல் மற்றும் புவனேஷ்வர் குமாரின் சாமர்த்தியமான டெத் பவுலிங் ஆகியவை இந்த போட்டியில் இந்திய அணிக்கு அனுகூலமான அணிக்கு நம்பிக்கையளிக்கும் விஷயங்களாக அமைந்தன.
பவுலிங் வீசத்தெரிந்த பேட்ஸ்மேன் தேவை என்றவகையில், ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக இந்திய அணியில் இடம்பிடித்த ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர், பண்ட்டுடன் இணைந்து அதிரடியாக பேட்டிங் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக டெத் ஓவர்களில் பெரிய ஷாட்டுகளை அபாரமாக ஆடினார். 18 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 33 ரன்கள் விளாசினார். முதல் டி20 போட்டியில் பவுலிங்கும் செய்தார்.
ஐபிஎல் 15வது சீசனின் 2ம் பாதியில் கேகேஆர் அணிக்காக அபாரமாக பேட்டிங் ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, இந்திய அணியிலும் இடம்பிடித்த வெங்கடேஷ் ஐயர், இந்திய அணியில் ஆட கிடைத்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக்கொண்டார். இந்திய அணிக்காக நன்றாக ஆடி, தனது தேர்வு சரிதான் என நியாயப்படுத்தியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் அவரது பேட்டிங்கால் கவரப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா, போட்டிக்கு பின் பேசியபோது வெங்கடேஷ் ஐயரை வெகுவாக புகழ்ந்தார்.
வெங்கடேஷ் ஐயர் குறித்து பேசிய ரோஹித் சர்மா, பண்ட்டும் வெங்கடேஷ் ஐயரும் இணைந்து சிறப்பாக இன்னிங்ஸை முடித்து கொடுத்தனர். வெங்கடேஷ் ஐயரின் வளர்ச்சி மகிழ்ச்சியளிக்கிறது. அவரது பக்குவத்தை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. அவரது திறமை மீது நம்பிக்கை வைத்து ஆடுகிறார். ஒவ்வொரு கேப்டனும் விரும்பும் மாதிரியான வீரர் வெங்கடேஷ் ஐயர். கடைசி கட்டத்தில் பந்துவீசவும் விரும்பினார் வெங்கடேஷ். இவரை மாதிரியான கேரக்டர்கள் அணியில் கண்டிப்பாக தேவை என்றார் ரோஹித் சர்மா.
