வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் விராட் கோலி, ரிஷப் பண்ட்டின் அதிரடி அரைசதம் மற்றும் வெங்கடேஷ் ஐயரின் அதிரடியான பேட்டிங்கால் 20 ஓவரில் 186  ரன்களை குவித்த இந்திய அணி, 187  ரன்கள் என்ற கடின இலக்கை வெஸ்ட் இண்டீஸுக்கு நிர்ணயித்துள்ளது.

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டி20 போட்டி இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்துவருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன், 10 பந்தில் 2 ரன் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ரோஹித்தும் கோலியும் இணைந்து அடித்து ஆடிவந்த நிலையில், ரோஹித் 19 ரன்னில் ஆட்டமிழந்தார். சூர்யகுமார் யாதவ் 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னரும் அதிரடியை தொடர்ந்த கோலி அரைசதம் அடித்தார். 41 பந்தில் 52 ரன்கள் அடித்து கோலி ஆட்டமிழந்தார். 106 ரன்களுக்கு இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் ரிஷப் பண்ட்டும் வெங்கடேஷ் ஐயரும் இணைந்து அடித்து ஆடினர். பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர்.

இருவரும் இணைந்து கடைசி 6 ஓவரில் 76 ரன்களை குவித்தனர். வெங்கடேஷ் ஐயர் 18 பந்தில் 33 ரன்களும், ரிஷப் பண்ட் 28 பந்தில் 52 ரன்களும் அடித்தனர்.

20 ஓவரில் 186 ரன்களை குவித்த இந்திய அணி, 187 ரன்கள் என்ற கடின இலக்கை வெஸ்ட் இண்டீஸுக்கு நிர்ணயித்துள்ளது.