இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 199 ரன்களை குவித்து, 200 ரன்கள் என்ற கடின இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தியா - இலங்கை இடையேயான முதல் டி20 போட்டி லக்னோவில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக ஆடவில்லை. சஞ்சு சாம்சன் மற்றும் தீபக் ஹூடா ஆகிய இருவருக்கும் இந்திய அணியில் இடம் கிடைத்தது. இவர்களில் தீபக் ஹூடாவிற்கு இதுதான் அறிமுக சர்வதேச டி20 போட்டி ஆகும்.
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, ரவீந்திர ஜடேஜா, வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், பும்ரா, சாஹல்.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக பேட்டிங் ஆடி சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ரோஹித் - இஷான் கிஷனின் அதிரடியான பேட்டிங்கால் முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 98 ரன்களை குவித்தது.
முதல் விக்கெட்டுக்கு ரோஹித் - இஷான் கிஷன் ஜோடி 11.5 ஓவரில் 111 ரன்களை குவித்தது. இஷான் கிஷன் அரைசதம் அடிக்க, ரோஹித் சர்மா 32 பந்தில் 44 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். ரோஹித்தின் விக்கெட்டுக்கு பிறகு ஸ்கோர் வேகம் குறைந்தது.
16வது ஓவரில் லஹிரு குமாராவின் பவுலிங்கில் ஒரு சிக்ஸரும் 2 பவுண்டரியும் விளாசி ஸ்கோரை சட்டென உயர்த்தினார் இஷான் கிஷன். 56 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 89 ரன்கள் அடித்த இஷான் கிஷன், சதமடிக்க வாய்ப்பிருந்தும் 11 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார்.
அதுவரை நிதானமாக ஆடிவந்த ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் ஆட்டமிழந்த பின்னர், பொறுப்பை தனது தோள்களில் சுமந்து, பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி இந்திய அணிக்காக சிறப்பாக முடித்து கொடுத்தார். 19வது ஓவரில் ஒரு சிக்ஸரும் 2 பவுண்டரியும் அடித்த ஷ்ரேயாஸ் ஐயர், கடைசி ஓவரில் ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் அடிக்க, இந்திய அணி 20 ஓவரில் 199 ரன்களை குவித்தது. 28 பந்தில் அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் ஐயர், 28 பந்தில் 57 ரன்கள் அடித்தார்.
இதையடுத்து 200 ரன்கள் என்ற கடின இலக்கை இலங்கை அணி விரட்டிவருகிறது.
