இஷான் கிஷனின் அதிரடி அரைசதம் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் காட்டடி ஃபினிஷிங்கால் 20 ஓவரில் 211 ரன்களை குவித்த இந்திய அணி, 212 ரன்கள் என்ற கடின இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டி20 போட்டி இன்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணி:
ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், அக்ஸர் படேல், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஆவேஷ் கான்.
தென்னாப்பிரிக்க அணி:
குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ரீஸா ஹென்ரிக்ஸ், டேவிட் மில்லர், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், வெய்ன் பர்னெல், ட்வைன் பிரிட்டோரியஸ், கேஷவ் மஹராஜ், டப்ரைஸ் ஷாம்ஸி, ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா.
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த இஷான் கிஷன், கேஷவ் மஹராஜின் ஒரே ஓவரில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் பறக்கவிட்டார். அந்த ஒரே ஓவரில் ஸ்கோரை மளமளவென உயர்த்திவிட்டார்.
48 பந்தில் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் இஷான் கிஷன். ஷ்ரேயாஸ் ஐயர் அடித்து ஆடி 27 பந்தில் 36 ரன்கள் அடித்தார். ரிஷப் பண்ட் 16 பந்தில் 29 ரன்கள் அடித்தார். டெத் ஓவர்களில் அடித்து ஆடிய ஹர்திக் பாண்டியா 12 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 31 ரன்கள் அடித்தார் பாண்டியா. இஷான் கிஷனின் அதிரடி அரைசதம், ஹர்திக் பாண்டியாவின் காட்டடி ஃபினிஷிங்கால் 20 ஓவரில் 211 ரன்களை குவித்து, 212 ரன்கள் என்ற கடின இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்தது.
