Asianet News TamilAsianet News Tamil

#INDvsENG தவான், பண்ட், பாண்டியாவின் அதிரடி அரைசதத்தால் சவாலான இலக்கை இங்கி.,க்கு நிர்ணயித்த இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தவான், ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அதிரடி அரைசதத்தால் 50 ஓவரில் 329 ரன்களை குவித்த இந்திய அணி, 330 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
 

india set challenging target to england in last odi against england
Author
Pune, First Published Mar 28, 2021, 5:34 PM IST

இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஒருநாள் தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி போட்டி இன்று புனேவில் நடந்துவருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது.

ரோஹித்தும் தவானும் இணைந்து அதிரடியாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். குறிப்பாக தவான் மிகச்சிறப்பாக ஆடி பவுண்டரிகளாக விளாசி அரைசதம் அடித்து, இந்திய அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். முதல் விக்கெட்டுக்கு ரோஹித்தும் தவானும் இணைந்து 14.4 ஓவரில் 103 ரன்களை குவித்து கொடுத்தனர்.

ரோஹித் 37 ரன்னில் அடில் ரஷீத்தின் சுழலில் ஆட்டமிழக்க, 56 பந்தில் 10 பவுண்டரிகளுடன் 67 ரன் அடித்த தவானும் ரஷீத்தின் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கோலி 7 ரன்னில் மொயின் அலியின் பந்தில் க்ளீன் போல்டாக, 123 ரன்களுக்கே இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், கேஎல் ராகுலும் 18 பந்தில் 7 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார்.

24.2 ஓவரில் இந்திய அணி 157 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழக்க, அதன்பின்னர் ரிஷப் பண்ட்டும் ஹர்திக் பாண்டியாவும் இணைந்து அடித்து ஆடி வேகமாக ஸ்கோரை உயர்த்தினர்.  அணிக்கு நல்ல ஸ்டார்ட் கிடைத்தும் சீனியர் வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்துவிட்டதை நினைத்து பதற்றமோ பயமோ அடையாமல், தனது இயல்பான ஆட்டத்தை ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி அரைசதம் அடித்தார் ரிஷப் பண்ட்.

மொயின் அலியின் சுழலில் ஒரே ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசிய ஹர்திக் பாண்டியா, தொடர்ச்சியாக பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி ரிஷப் பண்ட்டுக்கு ஆதரவு கொடுத்தார். அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ரிஷப் பண்ட், 62 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 78 ரன்கள் அடித்து சாம் கரனின் பந்தில் ஆட்டமிழந்தார். 5வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியாவும் ரிஷப் பண்ட்டும் இணைந்து 11 ஓவரில் 99 ரன்களை குவித்தனர்.

ஹர்திக் பாண்டியா 36 பந்தில் அரைசதம் அடித்தார். ரிஷப் பண்ட்டின் விக்கெட்டுக்கு பிறகு ஹர்திக்குடன் க்ருணல் பாண்டியா ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த ஹர்திக் பாண்டியா, 44 பந்தில் 64 ரன் அடித்து ஆட்டமிழக்க, அதன்பின்னர் ஷர்துல் தாகூர் மட்டும் அதிரடியாக ஆடி 3 சிக்ஸர்களுடன் 21 பந்தில் 30 ரன் அடித்தார். அவரும் 46வது ஓவரில் ஆட்டமிழக்க, க்ருணல், புவனேஷ்வர் குமார், பிரசித் கிருஷ்ணாவும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, 48.3 ஓவரில் 329 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது.

ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்த போது, இந்திய அணி 39 ஓவரில் 276 ரன்களை குவித்திருந்தது. அவர் ஆட்டமிழந்த பின்னர், 11 ஓவரில் வெறும் 59 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட்டானது. கடந்த போட்டியில் 337 ரன்களை விரட்டிய இங்கிலாந்து அணியால் இந்த இலக்கை விரட்ட முடியும். ஆனாலும் இது சவாலான இலக்குதான். ஏனெனில் கடந்த போட்டியில் இந்திய ஸ்பின்னர்களைத்தான் இங்கிலாந்து வீரர்கள் அடித்து நொறுக்கினர். ஆனால் இந்த போட்டியில் 4 ஃபுல்டைம் ஃபாஸ்ட் பவுலர்களுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. எனவே இந்த இலக்கை விரட்டுவது சவாலாகத்தான் இருக்கும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios