இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக அஜித் அகார்கரை நியமித்தால் நன்றாக இருக்கும் என இந்திய சீனியர் பவுலர் ஒருவர் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் பயிற்சியாளர்கள் குழு, கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பைக்கு பின்னர் மாற்றப்பட்டது. தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தலைமையிலான பயிற்சியாளர்கள் மாற்றப்பட்டு ராகுல் டிராவிட் தலைமையிலான பயிற்சியாளர் குழு நியமிக்கப்பட்டது.
ஏற்கனவே பரத் அருண் பவுலிங் பயிற்சியாளராக இருந்தார். இப்போது ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக இருக்கும் நிலையில், பராஸ் மஹாம்ப்ரே பவுலிங் பயிற்சியாளராக உள்ளார்.
பராஸ் மஹாம்ப்ரே சர்வதேச கிரிக்கெட்டில் போதிய அனுபவமில்லாதவர். சர்வதேச கிரிக்கெட்டில் வெறும் 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடியவர். அவர் நல்ல பவுலிங் கோச்சாக இருந்தாலும் கூட, சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிய சிறந்த அனுபவம் வாய்ந்த ஃபாஸ்ட் பவுலரான அஜித் அகார்கரை இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக நியமித்தால், அது பவுலர்களுக்கு பெரும் உதவிகரமாக இருக்கும் என்று சீனியர் பவுலர் ஒருவர் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
2023ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை வரை அஜித் அகார்கரை பவுலிங் பயிற்சியாளராக நியமித்தால் நன்றாக இருக்கும் என்று, இந்திய அணியில் பவுலிங் யூனிட் தொடர்பாக முக்கியமான முடிவுகளை எடுக்கும் சீனியர் பவுலர் ஒருவர் விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித் அகார்கர் 26 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடி 58 விக்கெட்டுகளையும், 191 ஒருநாள் போட்டிகளில் ஆடி 288 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஐபிஎல்லில் 42 போட்டிகளில் விளையாடி 26 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். முதல் தர கிரிக்கெட்டில் நீண்ட அனுபவம் வாய்ந்த அகார்கர், 103 முதல் தர போட்டிகளில் ஆடி 315 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
