ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபாரமாக பேட்டிங் ஆடி 352 ரன்களை குவித்தது. 

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவரும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும் ஷிகர் தவானும் அவசரப்படாமல் நிதானமாக தொடங்கி இன்னிங்ஸை கொஞ்சம் கொஞ்சமாக பில்டு செய்தனர். 

குல்டர்நைல் வீசிய 8வது ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்து அதிரடியை தொடங்கினார் தவான். நிதானமாகவும் அதேநேரத்தில் ரன்ரேட் குறைந்துவிடாமலும் இருவரும் ஆடினர். இருவருமே அரைசதம் அடித்தனர். ஸ்டார்க், குல்டர்நைல், கம்மின்ஸ், ஸாம்பா, மேக்ஸ்வெல் ஆகியோர் மாறி மாறி பந்துவீசியும் முதல் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. 

முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 127 ரன்களை குவித்தனர். ரோஹித் சர்மா 57 ரன்களில் குல்டர்நைலின் பந்தில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் தவானுடன் ஜோடி சேர்ந்த கோலி அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார். தவான் அதிரடியாக ஆட, கோலி அவருக்கு சிங்கிள் தட்டி கொடுத்தார். அபாரமாக ஆடி சதமடித்த தவான், 117 ரன்களில் ஆட்டமிழந்தார். 

37வது ஓவரில் தவான் ஆட்டமிழந்ததால், நான்காம் வரிசையில் ஹர்திக் பாண்டியா இறக்கப்பட்டார். தவான் ஆட்டமிழந்த பிறகு, கடைசி 14 ஓவர்கள் இருந்த நிலையில், கடைசி ஓவர்களை அதிரடியாக ஆடக்கூடிய ஹர்திக் பாண்டியா இறக்கப்பட்டார். அவரும் அவர் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையை காப்பாற்றினார். 27 பந்துகள் மட்டுமே ஆடி 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 48 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் கோலி, தோனி, கேஎல் ராகுல் ஆகியோர் அதிரடியாக அடித்து ஆடி ரன்களை குவித்தனர். கடைசி ஓவரில் தோனியும் கோலியும் அவுட்டாக, கடைசி ஓவரில் களத்திற்கு வந்த ராகுல், 3 பந்துகளில் 11 ரன்களை அடித்தார் ராகுல். ரோஹித், தவான், கோலி, ஹர்திக், தோனி, ராகுல் ஆகிய அனைவரின் அதிரடியான ஆட்டத்தாலும் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 352 ரன்களை குவித்தது. 

353 ரன்கள் என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி ஆடிவருகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக உலக கோப்பையில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.