வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய அந்த அணியை 176 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்துவருகிறது. இந்திய அணியின் 1000வது சர்வதேச ஒருநாள் போட்டி இது.
பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் ஷேய் ஹோப்பை 8 ரன்னில் வீழ்த்தி பிரேக் கொடுத்தார் முகமது சிராஜ்.
அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரரான பிரண்டன் கிங் (13) மற்றும் டேரன் பிராவோ (18) ஆகிய இருவரையும் வாஷிங்டன் சுந்தர் வீழ்த்தினார். இதையடுத்து மிடில் ஓவர்களில் அபாரமாக பந்துவீசிய யுஸ்வேந்திர சாஹல் ப்ரூக்ஸ்(12), பூரன் (18) மற்றும் பொல்லார்டு(0) ஆகிய மூவரையும் சாஹல் வீழ்த்த, வெஸ்ட் இண்டீஸ் அணி 79 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
அதன்பின்னர் 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஜேசன் ஹோல்டரும் ஃபேபியன் ஆலனும் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடி 8வது விக்கெட்டுக்கு 78 ரன்களை சேர்த்தனர். ஃபேபியன் ஆலனை 29 ரன்களுக்கு வீழ்த்தி அந்த ஜோடியை வீழ்த்தி பிரேக் கொடுத்தார் வாஷிங்டன் சுந்தர். அரைசதம் அடித்த ஹோல்டர் 57 ரன்னில் ஆட்டமிழக்க, வெஸ்ட் இண்டீஸை 176 ரன்களுக்கு சுருட்டியது இந்திய அணி.
இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக சாஹல் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 177 ரன்கள் என்ற எளிய இலக்கை இந்திய அணி விரட்டுகிறது.
