இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் காலை 9.30 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. 

இந்த போட்டியிலும் தென்னாப்பிரிக்க அணி டாஸ் தோற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. ராஞ்சி ஆடுகளம் ஸ்பின்னிற்கு சாதகமானது என்பதால் இஷாந்த் சர்மாவை நீக்கிவிட்டு அறிமுக ஸ்பின்னர் நதீமுடன் களமிறங்கியுள்ளது இந்திய அணி. 

ரோஹித் சர்மா மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் இன்னிங்ஸை தொடங்கினர். ரபாடா வீசிய முதல் ஓவரிலேயே பவுண்டரி அடித்த மயன்க் அகர்வால், வழக்கம்போல கவனமாக ஆடினார். ஆனாலும் ரபாடாவிடம் வீழ்ந்தார் மயன்க். இரண்டு பவுண்டரிகளுடன் 10 ரன்கள் அடித்திருந்த நிலையில் ரபாடாவின் பந்தில் மூன்றாவது ஸ்லிப்பில் நின்ற எல்கரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

அதன்பின்னர் களத்திற்கு வந்த இந்திய டெஸ்ட் அணியின் நட்சத்திர வீரர் புஜாராவும் ரபாடாவின் பந்தில் டக் அவுட்டாகி வெளியேற, இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட ஆரம்பித்தது. இதையடுத்து ரோஹித்துடன் கேப்டன் கோலி ஜோடி சேர்ந்தார். ரோஹித் - கோலி அனுபவ ஜோடி பார்ட்னர்ஷிப் அமைத்து இந்திய அணியை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்லும் என நம்பிய ரசிகர்களுக்கு விராட் கோலியும் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். 

நோர்ட்ஜேவின் பந்தில் விராட் கோலி எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். விராட் கோலி 12 ரன்களில் வெளியேற, 39 ரன்களுக்கே இந்திய அணி 3 முக்கியமான விக்கெட்டுகளை இழந்துவிட்டது. முதல் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு முன், முதல் செசனிலேயே இந்திய அணி முக்கியமான விக்கெட்டுகளை இழந்துவிட்டதால் இந்திய அணிக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. 

ரோஹித்துடன் ரஹானே ஜோடி சேர்ந்து ஆடிவருகிறார். ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் ரோஹித் சர்மா களத்தில் நிலைத்துவிட்டார். ரோஹித் களத்தில் நிலைத்துவிட்டால் பெரிய இன்னிங்ஸ் ஆடுவார். எனவே நிதானமாக ஆடி சதமடித்துவிட்டால், அதன்பின்னர் அவர் பார்த்துக்கொள்வார். ரோஹித்தும் ரஹானேவும் பெரிய பார்ட்னர்ஷிப்பை அமைக்கும் கட்டாயத்தில் ஆடிவருகின்றனர்.