இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. இங்கிலந்து 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
India Has Chance To Win In 2nd Test Against England: இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்தது. இந்திய கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் (269 ரன்) அடித்து அசத்தினார். பின்பு தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 407 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து அணி ஆல் அவுட்
ஒரு கட்டத்தில் 84/5 என பரிதவித்த அந்த அணியை ஹாரி ப்ரூக் (158 ரன்), ஜேமி ஸ்மித் (184 ரன் நாட் அவுட்) ஆகிய இருவரும் அதிரடி சதம் விளாசி சரிவில் இருந்து மீட்டனர். ஆனால் பின்வரிசை வீரர்கள் சரியாக விளையாடததால் இங்கிலாந்து அணி 407 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் முகமது சிராஜ் சிறப்பாக பவுலிங் செய்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு உதவியாக ஆகாஷ் தீப் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
கே.எல்.ராகுல் அரை சதம்
பின்பு தனது 2வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழந்து 64 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 28 ரன்களுடனும், கருண் நாயர் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4ம் நாள் ஆட்டம் தொடங்கியதும் கருண் நாயர் 26 ரன்னில் அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடி அரை சதம் (84 பந்தில் 55) அடித்த கே.எல்.ராகுலும் டங் பந்தில் போல்டானார்.
சுப்மன் கில் மீண்டும் சதம்
இதன்பிறகு ஜோடி சேர்ந்த கேப்டன் சுப்மன் கில்லும், ரிஷப் பண்ட்டும் அதிரடியாக விளையாடினார்கள். அதிரடி அரை சதம் விளாசிய ரிஷப் பண்ட் 8 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 58 பந்தில் 65 ரன் அடித்தார். அப்போது அணியின் ஸ்கோர் 236/4 என்ற நிலையில் இருந்தது. ஒருபக்கம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபக்கம் கேப்டன் சுப்மன் கில் அதிரடியாக விளையாடினார். அவருக்கு ஜடேஜா நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். அற்புதமாக விளையாடிய சுப்மன் கில் சூப்பர் சதம் விளாசினார்.
இந்தியா 427க்கு டிக்ளேர்
தொடர்ந்து ஜடேஜா நிதானம் காட்டி அரைசதம் அடிக்க, சுப்மன் கில் பவுண்டரிகளும், சிக்சர்களுமாக பறக்க விட்டார். அசத்தலாக விளையாடிய அவர் 162 பந்துகளில் 13 பவுண்டரி, 8 சிக்சர்களுடன் 161 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்பு நிதிஷ் குமார் ரெட்டி 1 ரன்னில் அவுட் ஆனார். பின்பு இந்திய அணி 600 ரன்களை முன்னிலை பெற்ற நிலையில், அணியின் ஸ்கோர் 427/6 என இருந்தபோது டிக்ளேர் செய்தது. ஜடேஜா 69 ரன்னில் அவுட்டாகாமல் இருந்தார்.
இங்கிலாந்து 3 விக்கெட் இழந்து திணறல்
இதனால் இங்கிலாந்து அணிக்கு 608 ரன்கள் என இமாலய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. தொடக்க வீரர் சாக் க்ரோலி ரன் ஏதும் எடுக்காமல் சிராஜ் பந்தில் கேட்ச் ஆனார். சில பவுண்டரிகளை ஓட விட்ட பென் டக்கெட் (15 பந்தில் 25) ஆகாஷ் தீப் பந்தில் போல்டானார். இதனைத் தொடர்ந்து ஸ்டார் வீரர் ஜோ ரூட்டும் (6) ஆகாஷ் தீப்பின் சூப்பர் பந்தில் கிளீன் போல்டானார். இங்கிலாந்து அணி 4ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழந்து 72 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியில் ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளும், சிராஜ் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
இந்தியா வெற்றி பெறுமா?
இங்கிலாந்து வெற்றி பெற இன்னும் 536 ரன்கள் தேவை. அந்த அணி இனிமேல் வெற்றி பெற முடியாது. ஆனால் டிரா செய்ய முடியும். அதே வேளையில் இந்திய அணி மீதமுள்ள 7 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. நாளை கடைசி நாளின் முதல் ஒரு மணி நேரத்தில் இங்கிலாந்து விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்தியா வெற்றி பெறும்.