இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, ஹனுமா விஹாரியின் அபார சதம் மற்றும் விராட் கோலி, மயன்க் அகர்வால், இஷாந்த் சர்மா ஆகியோரின் பொறுப்பான அரைசதத்தால் முதல் இன்னிங்ஸில் 416 ரன்களை குவித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட்  இண்டீஸ் அணி, பும்ராவின் வேகத்தை சமாளிக்க முடியாமல் இரண்டாம் நாள் ஆட்டத்திலேயே 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதில் பும்ரா 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இரண்டாம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்திருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. மூன்றாம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு முன்பே, அந்த அணியை 117 ரன்களுக்கு ஆல் அவுட் செய்துவிட்டது இந்திய அணி. 

299 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் வெறும் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். 10 ஓவர்களுக்கு மேல் பேட்டிங் ஆடிய ராகுல், வெறும் 6 ரன்கள் மட்டுமே அடித்து அவரும் ரோச்சின் பந்தில் அவுட்டானார். எதிர்பாராத திருப்பமாக விராட் கோலி முதல் பந்திலேயே கோல்டன் டக்காகி சென்றார். கோலி இப்படியெல்லாம் அவுட்டாகும் ஆளே கிடையாது. மிக மிக அரிதாக இந்த சம்பவம் நடந்தது. 

அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ரஹானேவும் ஹனுமா விஹாரியும் அபாரமாக ஆடி ரன்களை சேர்த்தனர். இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடி இருவருமே அரைசதம் அடித்தனர். முதல் இன்னிங்ஸில் சதம் அடித்த ஹனுமா விஹாரி இந்த இன்னிங்ஸிலும் அரைசதம் அடிக்க, முதல் இன்னிங்ஸில் சரியாக ஆடாத ரஹானே, இந்த இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்திய அணி டிக்ளேர் செய்தது. 

இந்திய அணி மொத்தமாக 467 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், 468 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் பிராத்வெயிட்டை 3 ரன்களில் வெளியேற்றினார் இஷாந்த் சர்மா. மற்றொரு தொடக்க வீரரான காம்ப்பெல்லை 16 ரன்களில் வீழ்த்தினார் ஷமி. இதையடுத்து டேரன் பிராவோவும் ப்ரூக்ஸும் ஜோடி சேர்ந்து ஆடிவருகின்றனர். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்துள்ளது. 

இன்னும் 2 நாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 423 ரன்கள் தேவை. அந்த அணியிடம் 8 விக்கெட்டுகள் கையில் உள்ளது. இந்திய அணி அந்த 8 விக்கெட்டுகளையும் நான்காம் நாளான இன்றைய ஆட்டத்தில் வீழ்த்திவிடும் என்று எதிர்பார்க்கலாம்.