இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் 303 ரன்களை குவித்து டிக்ளேர் செய்த இந்திய அணி, 447 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தியா - இலங்கை இடையே பெங்களூருவில் நடந்துவரும் பகலிரவு (2வது) டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 252 ரன்கள் அடித்தது. இந்திய அணியில் அபாரமாக பேட்டிங் ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர் 92 ரன்களை குவித்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி, பும்ராவின் பவுலிங்கில் சரணடைந்தது. அனைத்து வீரர்களுமே சொற்ப ரன்களில் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக ஆட்டமிழக்க, 109 ரன்களுக்கே சுருண்டது இலங்கை அணி. இந்திய அணி சார்பில் பும்ரா அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
143 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் 22 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டனும் மற்றொரு தொடக்க வீரருமான ரோஹித் சர்மா சிறப்பாக பேட்டிங் ஆடி 46 ரன்கள் அடித்து 4 ரன்னில் அரைசதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். ஹனுமா விஹாரி 35 ரன்னிலும், விராட் கோலி 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
5ம் வரிசையில் இறங்கிய ரிஷப் பண்ட், களத்திற்கு வந்தது முதலே அடித்து ஆடி ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். பவுண்டரியும் சிக்ஸருமாக அடித்து ஆடிய ரிஷப் பண்ட் 28 பந்தில் 7 பவுண்டரிகள் மற்றும் 2சிக்ஸர்களுடன் அரைசதம் அடித்தார் ரிஷப் பண்ட். ஆனால் அரைசதம் அடித்த மாத்திரத்தில் 50 ரன்களிலேயே அவுட்டும் ஆனார். அதன்பின்னர் பொறுப்புடன் ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர், 2வது இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்தார். ஜடேஜா 22 ரன்னிலும், அஷ்வின் 13 ரன்னிலும் அவுட்டாக, அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் ஐயர் 67 ரன்களில் ஆட்டமிழந்தார். அக்ஸர் படேல் 9 ரன்களில் அவுட்டாக, 9 விக்கெட் இழப்பிற்கு 303ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது.
மொத்தமாக 446 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 447 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை இலங்கைக்கு நிர்ணயித்துள்ளது. இதை இலங்கை அணி அடிக்க சாத்தியமே இல்லை என்பதால் இந்திய அணியின் வெற்றி உறுதி.
