இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் ஆடாததற்கான காரணத்தை கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.
இலங்கை அணி 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்தியாவிற்கு வந்துள்ளது. முதலில் டி20 தொடரும், அதைத்தொடர்ந்து டெஸ்ட் தொடரும் நடக்கவுள்ளன.
3 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று லக்னோவில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடுகிறது.
இந்த தொடரில் விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், தீபக் சாஹர் ஆகிய வீரர்கள் காயம் காரணமாக ஆடவில்லை. எனவே ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா ஆகிய இருவருக்கும் ஆடும் லெவனில் இடம் கிடைத்துள்ளது. ஜடேஜா மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.
ருதுராஜ் கெய்க்வாட் ஆடும் லெவனில் இடம்பெறாதது குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட் இந்த போட்டியில் ஆடுவதாகத்தான் இருந்தது. ஆனால் மணிக்கட்டு காயத்தால் அவரால் ஆடமுடியாமல்போனது என்றார் ரோஹித்.
ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியில் ஆடுவதற்கான வாய்ப்பு உருவாகும்போதெல்லாம், ஏதாவது ஒரு ஃபிட்னெஸ் காரணத்தால் வாய்ப்புகள் பறிபோய்க்கொண்டே இருக்கின்றன.
முதல் டி20 போட்டிக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, வெங்கடேஷ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.
