தியோதர் டிராபி தொடரில் இந்தியா பி மற்றும் இந்தியா சி ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடந்தது. 

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா சி அணி 50 ஓவரில் 280 ரன்களை குவித்தது. 126 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா சி அணி. அந்த அணியின் டாப் ஆர்டர்கள் யாருமே சரியாக ஆடவில்லை. அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக்கும் சோபிக்கவில்லை.

31.2 ஓவரில் 126 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது இந்தியா சி அணி. அதன்பின்னர் விராட் சிங்குடன் ஜோடி சேர்ந்த அக்ஸர் படேல் அபாரமாக பேட்டிங் ஆடினார். அரைசதம் அடிக்கும் வரை பொறுமையாக ஆடிய அவர் அதன்பின்னர் ருத்ரதாண்டவம் ஆடிவிட்டார். 

40 ஓவர் முடிவில் இந்தியா சி அணி 158 ரன்கள் தான் அடித்திருந்தது. கடைசி 10 ஓவரில் மட்டும் 122 ரன்களை குவித்தது இந்தியா சி. 41வது ஓவரில் விராட் சிங் இரண்டு சிக்ஸர்களை விளாசினார். 42 மற்றும் 43வது ஓவர்களில் அக்ஸர் படேல் தலா ஒரு பவுண்டரி அடித்தார். 44வது ஓவரில் அக்ஸர் மற்றும் விராட் சிங் ஆகிய இருவரும் தலா ஒரு பவுண்டரி அடித்தனர். 

 

47 ஓவர் முடிவில் இந்தியா சி அணி 234 ரன்களை எட்டியது. அதன்பின்னர் எஞ்சிய 3 ஓவர்களில் அக்ஸர் படேல் அதிரடியாக ஆடி எதிரணியின் பவுலிங்கை அடித்து நொறுக்கிவிட்டார். ரூஷ் கலாரியா வீசிய 48வது ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை விளாசினார். 49வது ஓவரில் அக்ஸர் 2 பவுண்டரிகள் அடித்தார். கடைசி ஓவரில் அக்ஸர் படேல் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடிக்க, அந்த ஓவரில் 14 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதையடுத்து 50 ஓவரில் 280 ரன்களை குவித்தது இந்தியா சி அணி. 61 பந்தில் 98 ரன்களை குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார் அக்ஸர் படேல். 

281 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா பி அணியில், தமிழக வீரர் பாபா அபரஜித்தை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், கேதர் ஜாதவ், நிதிஷ் ராணா, பார்த்திவ் படேல், விஜய் சங்கர் ஆகியோர் படுமோசமாக சொதப்பினர். இவர்களில் யஷஸ்வி நிலைத்து நின்று ஆடமுயற்சி செய்து தோற்றார். 28 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். ஆனால் கேதர், ராணா, பார்த்திவ், விஜய் சங்கர் ஆகியோர் ஒற்றை இலக்கங்களில் வெளியேறினர். 

பாபா அபரஜித் மட்டும் ஒருமுனையில் நிலைத்து நிற்க, மறுமுனையில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. இதையடுத்து அரைசதம் அடித்த அபரஜித்தும் 53 ரன்களில் 9வது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அதன்பின்னர் எஞ்சிய ஒரு விக்கெட்டையும் அதே ஓவரில் இழந்த இந்தியா பி அணி, 144 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து ஷுப்மன் கில் தலைமையிலான இந்தியா சி அணி, 136 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா சி அணி அபார வெற்றி பெற்றது.