இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழையால் ரத்தான நிலையில், இரண்டாவது போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெய்னில் நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர்கள் ரோஹித்தும் தவானும் சரியாக ஆடவில்லை. இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் வழக்கம்போலவே விராட் கோலி இந்த போட்டியிலும் அசத்தலாக ஆடினார். 

இந்திய அணியின் சிக்கலாக இருந்துவரும் நான்காம் வரிசையில் ரிஷப் பண்ட் இறக்கப்பட்டார். ஆனால் ரிஷப் பண்ட் அதற்கு அர்த்தம் சேர்க்கவில்லை. அவசரப்படாமல் நிதானமாகத்தான் ஆடினார். ஆனால் அதுவே அவருக்கு வினையாக அமைந்துவிட்டது. 35 பந்துகளில் 20 ரன்கள் மட்டுமே அடித்து பிராத்வெயிட்டின் பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் விராட் கோலியுடன் ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி சேர்ந்தார். இதற்கிடையே விராட் கோலி அரைசதம் அடித்துவிட்டார். கோலியுடன் இணைந்து சிறப்பாக ஆடினார் ஷ்ரேயாஸ் ஐயர். ஷ்ரேயாஸ் ஐயர் பொறுப்புடனும் அதேநேரத்தில் அடித்தும் ஆடினார். கோலியும் ஷ்ரேயாஸ் ஐயரும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 115 ரன்களை சேர்த்தனர். விராட் கோலி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது 42வது சதத்தை பூர்த்தி செய்தார். 

120 ரன்கள் அடித்து கோலி அவுட்டாக, ஷ்ரேயாஸ் ஐயரும் 71 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கேதர் ஜாதவ் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் தலா 16 ரன்கள் அடிக்க, இந்திய அணி 50 ஓவர் முடிவில் 279 ரன்களை குவித்தது. 

மழை குறுக்கிட்டதால், இரண்டாவது இன்னிங்ஸ் 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு டி.எல்.எஸ் முறைப்படி 270 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 46 ஓவரில் 270 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் கிறிஸ் கெய்லை வெறும் 11 ரன்களில் அவுட்டாக்கி அனுப்பினார் புவனேஷ்வர் குமார். அதன்பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரர் ஷாய் ஹோப், லெவிஸுடன் ஜோடி சேர்ந்தார். ஆனால் ஹோப்பை களத்தில் நிலைக்கவிடாமல் 5 ரன்களில் போல்டாக்கி அனுப்பினார் கலீல் அகமது. 

அதன்பின்னர் களத்திற்கு வந்த ஹெட்மயரும் சோபிக்கவில்லை. 18 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹெட்மயரின் விக்கெட்டை குல்தீப் வீழ்த்தினார். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த லெவிஸையும் 65 ரன்களில் பெவிலியனுக்கு அனுப்பினார் குல்தீப் யாதவ். அதன்பின்னர் பூரான் மட்டுமே 42 ரன்கள் அடித்தார். மற்ற அனைவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். கெய்லின் விக்கெட்டை வீழ்த்திய புவனேஷ்வர் குமார், அதன்பின்னர் நிகோலஸ் பூரான், சேஸ், கீமார் ரோச் ஆகிய மூவரையும் வீழ்த்தினார். பிராத்வெயிட்டின் விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். 

வெஸ்ட் இண்டீஸ் அணி 42 ஓவரில் 210 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. இதையடுத்து டி.எல்.எஸ் முறைப்படி 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. அடுத்த போட்டியிலும் வென்றால் 2-0 என இந்திய அணி தொடரை வெல்லலாம்.