இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றன. இதையடுத்து தொடரை தீர்மானிக்கும் கடைசி ஒருநாள் போட்டி கட்டாக்கில் நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, வெஸ்ட் இண்டீஸை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் எவின் லூயிஸ் மந்தமாக பேட்டிங் ஆடி 50 பந்தில் 21 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த ரோஸ்டான் சேஸ் தட்டுத்தடுமாறி ஆடிக்கொண்டிருந்த, ஷாய் ஹோப் 42 ரன்னில் அவுட்டானார். அதிரடியாக ஆடிய ஹெட்மயர் 33 பந்தில் 37 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, சேஸும் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து நிகோலஸ் பூரானுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் பொல்லார்டு பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினார். பூரான் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார். 40 ஓவரில் 197 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. ஆனால் கடைசி 10 ஓவரில் பூரான் மற்றும் பொல்லார்டு ஆகிய இருவரும் தாறுமாறாக அடித்து ஆடி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். கடைசி 10 ஓவரில் மட்டும் 118 ரன்களை குவித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. பூரான் 89 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். பொல்லார்டு கடைசி வரை ஆட்டமிழக்காமல் 74 ரன்கள் அடித்திருந்தார். 50 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 315 ரன்களை

அடித்தது. 

316 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும் கேஎல் ராகுலும் அதிரடியாக ஆடி சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இருவருமே கடந்த போட்டியில் ஆடியதை போலவே மிகவும் நேர்த்தியான ஷாட்டுகளை தெளிவாக ஆடினர். இருவருமே அரைசதம் அடிக்க, நன்கு செட்டில் ஆகியிருந்த ரோஹித் சர்மா 63 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ராகுலுடன் ஜோடி சேர்ந்த சேஸிங் மாஸ்டர் கோலி, பார்ட்னர்ஷிப் அமைத்து இலக்கை விரட்டினார். 

சிறப்பாக ஆடிய ராகுல், 77 ரன்களில் ஆட்டமிழந்தார். தவானுக்கு பதிலாக அணியில் இடம்பிடித்து, தொடர்ச்சியாக தனது சிறப்பான பேட்டிங்கால் அணியில் நிரந்தர இடத்தை பிடித்துள்ளார் ராகுல். அதன்பின்னர் ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், கேதர் ஜாதவ் ஆகிய மூவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேற, கோலியின் மீதான அழுத்தம் அதிகரித்தது. ஆனால் வழக்கம்போலவே இந்த அழுத்தத்தை சிறப்பாக கையாண்டு அபாரமாக பேட்டிங் ஆடினார் கோலி. அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஜடேஜா சிறப்பாக ஆடினார். 

அரைசதம் அடித்து இலக்கை நோக்கியும் தனது சதத்தை நோக்கியும் ஆடிக்கொண்டிருந்த கோலி, 85 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் வெற்றிக்கு 4 ஓவரில் 30 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கோலி ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களத்திற்கு வந்த ஷர்துல் தாகூர் பவுண்டரியும் சிக்ஸரும் அடித்து அசத்தினார். ஜடேஜாவும் ஷர்துல் தாகூரும் இணைந்து 49வது ஓவரில் இலக்கை எட்டினர். இதையடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 2-1 என வென்றது. ஆட்டநாயகனாக விராட் கோலியும் தொடர் நாயகனாக ரோஹித் சர்மாவும் தேர்வு செய்யப்பட்டனர்.