இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்று டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்தியா - இலங்கை இடையேயான முதல் டி20 போட்டி இன்று லக்னோவில் நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித்தும் இஷான் கிஷனும் இறங்கினர். ருதுராஜ் கெய்க்வாட் மணிக்கட்டு காயம் காரணமாக இந்த போட்டியில் ஆடவில்லை.
ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் இணைந்து தொடக்கம் முதலே அதிரடியாக பேட்டிங் ஆடி சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு ரோஹித் - இஷான் கிஷன் ஜோடி 11.5 ஓவரில் 111 ரன்களை குவித்தது. இஷான் கிஷன் அரைசதம் அடிக்க, ரோஹித் சர்மா 32 பந்தில் 44 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கினார். ரோஹித்தின் விக்கெட்டுக்கு பிறகு ஸ்கோர் வேகம் குறைந்தது.
16வது ஓவரில் லஹிரு குமாராவின் பவுலிங்கில் ஒரு சிக்ஸரும் 2 பவுண்டரியும் விளாசி ஸ்கோரை சட்டென உயர்த்தினார் இஷான் கிஷன். 56 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 89 ரன்கள் அடித்த இஷான் கிஷன், சதமடிக்க வாய்ப்பிருந்தும் 11 ரன்னில் சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார்.
அதுவரை நிதானமாக ஆடிவந்த ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் ஆட்டமிழந்த பின்னர், பொறுப்பை தனது தோள்களில் சுமந்து, பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசி இந்திய அணிக்காக சிறப்பாக முடித்து கொடுத்தார். 19வது ஓவரில் ஒரு சிக்ஸரும் 2 பவுண்டரியும் அடித்த ஷ்ரேயாஸ் ஐயர், கடைசி ஓவரில் ஒரு சிக்ஸரும் ஒரு பவுண்டரியும் அடிக்க, இந்திய அணி 20 ஓவரில் 199 ரன்களை குவித்தது. 28 பந்தில் அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் ஐயர், 28 பந்தில் 57 ரன்கள் அடித்தார்.
200 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இலங்கை அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது. புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே இலங்கை அணியின் அதிரடி தொடக்க வீரர் பதும் நிசாங்கா போல்டானார். புவனேஷ்வர் குமாரின் அடுத்த (3வது ஓவர்) ஓவரில் காமிலா மிஷாரா 13 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் ஒருமுனையில் சாரித் அசலங்கா நிலைத்து ஆட, மறுமுனையில் லியானகே(11), தினேஷ் சண்டிமால் (10), தசுன் ஷனாகா (3), சாமிகா கருணரத்னே (21) ஆகியோர் ஆட்டமிழந்தனர். நிலைத்து ஆடிய அசலங்கா அரைசதம் அடித்தார். கடைசி வரை களத்தில் நின்று 47 பந்தில் 53 ரன்கள் அடித்தார். 20 ஓவரில் இலங்கை அணி 137 ரன்கள் மட்டுமே அடித்ததையடுத்து, 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்த போட்டியின் எந்த சூழலிலும் இலங்கை அணி இந்திய அணியின் மீது ஆதிக்கம் செலுத்தவில்லை. முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, அசால்ட்டாக இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
