அண்டர் 19 ஆசிய கோப்பை ஃபைனலில் இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா அண்டர் 19 அணி ஆசிய கோப்பையை வென்றது.
அண்டர் 19 ஆசிய கோப்பை தொடரின் ஃபைனல் துபாயில் நடந்தது. இந்தியா மற்றும் இலங்கை அண்டர் 19 அணிகள் ஃபைனலில் மோதின.
டாஸ் வென்ற இலங்கை அண்டர் 19 அணி முதலில் பேட்டிங் ஆடியது. 38 ஓவர்களாக குறைத்து ஆட்டம் நடத்தப்பட்டது. முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அண்டர் 19 அணியில் எந்த வீரருமே பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. சீரான இடைவெளியில் தொடர்ச்சியாக அனைவருமே ஆட்டமிழந்ததால் அந்த அணி வெறும் 106 ரன்கள் மட்டுமே அடித்தது.
இந்திய அணி அந்த எளிதான இலக்கை 22வது ஓவரிலேயே அடித்து அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் தொடக்க வீரர் ஹர்னூர் சிங் வெறும் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான அங்ரிஷ் ரகுவன்ஷி அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 56 ரன்களுடன் கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடித்து கொடுத்தார்.
3ம் வரிசையில் இறங்கிய ஷேன் ரஷீத், ரகுவன்ஷியுடன் இணைந்து சிறப்பாக ஆடி 31 ரன்கள் அடித்தார். இவர்களின் பொறுப்பான பேட்டிங்கால் எளிதாக இலக்கை அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா அண்டர் 19 அணி ஆசிய கோப்பையை வென்றது.
