உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் கடைசி லீக் போட்டியில் இலங்கை அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

உலக கோப்பை தொடரில் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறிவிட்ட இந்திய அணி, கடைசி லீக் போட்டியில் இலங்கை அணியுடன் ஆடியது. லீட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணியின் முதல் நான்கு விக்கெட்டுகள் 55 ரன்களுக்கே விழுந்துவிட்டது. அதன்பின்னர் மேத்யூஸும் திரிமன்னேவும் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினர்.

மிடில் ஓவர்களில் விக்கெட்டை எடுத்துத்தர வேண்டிய குல்தீப் யாதவின் பவுலிங் எடுபடவில்லை. குல்தீப் யாதவின் பவுலிங்கில் கொஞ்சம் கூட திணறாமல் சிறப்பாக சிங்கிள் ரொடேட் செய்தும் அடித்தும் ஆடினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய பவுலர்கள் திணறினர். மேத்யூஸ் - திரிமன்னே ஜோடி 5வது விக்கெட்டுக்கு 124 ரன்களை சேர்த்தது. அரைசதம் அடித்த திரிமன்னே 53 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின்னரும் தொடர்ந்து சிறப்பாக ஆடிய மேத்யூஸ் சதம் விளாசினார். சதமடித்த மேத்யூஸ் 113 ரன்கள் அடித்து 49வது ஓவரில் ஆட்டமிழந்தார். மேத்யூஸ் - திரிமன்னேவின் பொறுப்பான பேட்டிங்கால் 50 ஓவர் முடிவில் இலங்கை அணி 264 ரன்கள் அடித்தது.

265 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இருவருமே தெளிவாகவும் நிதானமாகவும் தொடங்கினர். அவசரப்படாமல் பொறுமையாக இன்னிங்ஸை பில்ட் செய்த இவர்கள் சிறப்பாக ஆடினர். ரோஹித் சர்மா அரைசதம் அடிக்க, அவரை தொடர்ந்து ராகுலும் அரைசதம் அடித்தார்.

வழக்கம்போலவே தனக்கு கிடைத்த நல்ல ஸ்டார்ட்டை பெரிய இன்னிங்ஸாக மாற்றினார் ரோஹித் சர்மா. தொடர்ந்து சிறப்பாக ஆடி பவுண்டரிகளாக விளாசிய ரோஹித் சர்மா, இந்த உலக கோப்பையில் தனது 5வது சதத்தை விளாசி 103 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதன்மூலம் ஒரு உலக கோப்பை தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார்.  2015 உலக கோப்பையில் சங்கக்கரா 4 சதங்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது 5 சதங்கள் அடித்து அந்த சாதனையை ரோஹித் சர்மா முறியடித்தார். ரோஹித் 103 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் ராகுலுடன் கேப்டன் கோலி ஜோடி சேர்ந்தார்.

நாக் அவுட் போட்டிக்கு முன்னதாக நல்ல ஃபார்மில் அபாரமாக ஆடி அணிக்கு நம்பிக்கையளித்த ராகுல், தன் பங்கிற்கு அவரும் சதமடித்தார். சதமடித்த பிறகு 41வது ஓவரில் மலிங்காவின் ஓவரில் அபாரமாக இரண்டு ஷாட் ஆடி 2 பவுண்டரிகள் அடித்த ராகுல், அதே ஓவரில் 111 ரன்களில் மலிங்காவின் பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் கோலியுடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியே போட்டியை முடித்து வைக்கும் என நினைத்தால் ரிஷப் பண்ட் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கோலியும் ஹர்திக் பாண்டியாவும் இணைந்து 44வது ஓவரில் இலக்கை எட்டி போட்டியை வெற்றிகரமாக முடித்துவைத்தது. 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி 15 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோற்றால் இந்திய அணி முதலிடத்தில் நீடிக்கும் என்பதால் அரையிறுதியில் நியூசிலாந்துடன் மோதும் வாய்ப்பை பெறும். ஆனால் ஆஸ்திரேலிய அணி வெல்கிறதா தோற்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.