இந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி இன்று நடந்தது. 

முதல் போட்டி நடந்த அதே ஆக்லாந்து மைதானத்தில் இரண்டாவது போட்டியும் இன்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியில் கப்டிலை தவிர யாராலும் எளிதாக ரன் அடிக்க முடியவில்லை. ஆரம்பத்தில் அதிரடியாக ஆடிய கப்டில் 33 ரன்களில் ஷர்துல் தாகூரின் பந்தில் ஆட்டமிழந்தார். 

பெரிய ஷாட்டுகளை ஆட முடியாமல் திணறிய முன்ரோ, கேன் வில்லியம்சன் ஆகியோர் பந்துக்கு நிகரான மற்றும் குறைவான ரன்களை மட்டுமே அடித்துவிட்டு பெவிலியனுக்கு திரும்பினர். வில்லியம்சன் 20 பந்தில் 14 ரன்கள் மட்டுமே அடித்தார். அவர் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. காலின் டி கிராண்ட் ஹோம் வெறும் 3 ரன்களில் நடையை கட்டினார். முன்ரோ 25 பந்தில் 26 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 

டெய்லரும் சரியாக ஆடவில்லை. இந்திய பவுலர்கள், அபாரமாக பந்துவீசி நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்தனர். குறிப்பாக பும்ரா, ஷமி, ஜடேஜா ஆகியோரின் பவுலிங் அபாரமாக இருந்தது. டெய்லர் 24 பந்தில் வெறும் 18 ரன்கள் மட்டுமே அவுட்டானார். டிம் சேஃபெர்ட் 2 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து 33 ரன்களை தன் பங்கிற்கு சேர்த்து கொடுக்க, அந்த அணி 20 ஓவரில் வெறும் 132 ரன்களை மட்டுமே அடித்தது. முதலில் பேட்டிங் ஆடி பெரிய ஸ்கோரை அடித்து இந்திய அணிக்கு கடினமான இலக்கை நிர்ணயிக்கும் முனைப்பில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி வெறும் 132 ரன்களை மட்டுமே அடித்தது. 

133 ரன்கள் என்ற மிக எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, முதல் ஓவரில் இரண்டு பவுண்டரிகளை விளாசி அதே ஓவரிலேயே அவுட்டும் ஆனார். இதையடுத்து ராகுலுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலியும் சரியாக ஆடாமல் ஏமாற்றமளித்தார். கோலி 11 ரன்களில் ஆட்டமிழந்தார். 

அணியின் நட்சத்திர வீரர்களும் சீனியர்களுமான ரோஹித் மற்றும் கோலியின் விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே இழந்துவிட்டதால் ராகுலும் ஷ்ரேயாஸ் ஐயரும் இணைந்து அடுத்த விக்கெட் விழுந்துவிடாமல் கவனமாக இருந்தனர். அதனால் பார்ட்னர்ஷிப் அமைக்கும் முனைப்பில் நிதானமாக ஆடினர். களத்தில் நிலைத்த பிறகு, ஷ்ரேயாஸ் ஐயர் வழக்கம்போல பெரிய ஷாட்டுகளை அசால்ட்டாக அடித்தார். இதற்கிடையே ராகுல் அரைசதம் விளாசினார். அடித்து ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர், 16வது ஓவரில் சிக்ஸரும் பவுண்டரியும் அடித்தார். 17வது ஓவரிலும் ஒரு சிக்சரை விளாசிய அவர், அணியின் வெற்றிக்கு வெறும் 8 ரன்களே தேவைப்பட்ட நிலையில், 32 பந்தில் 44 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து களத்திற்கு வந்த ஷிவம் துபே சிக்ஸர் விளாசி போட்டியை வெற்றிகரமாக முடித்துவைத்தார். 18வது ஓவரிலேயே இலக்கை எட்டிய இந்திய அணி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் 57 ரன்கள் அடித்த கேஎல் ராகுல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.