Asianet News TamilAsianet News Tamil

#ENGvsIND இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இந்தியா வரலாற்று சிறப்புமிக்க வெற்றி..!

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

india beat england by 151 runs in second test held at london lords
Author
London, First Published Aug 17, 2021, 9:27 AM IST

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆன நிலையில், 2வது டெஸ்ட் போட்டி கடந்த 12ம் தேதி தொடங்கி லண்டன் லார்ட்ஸில் நடந்தது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மாவும் ராகுலும் இணைந்து அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 129 ரன்களை சேர்த்தனர். ரோஹித் 83 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். ஆனால் கேஎல் ராகுல் அபாரமாக ஆடி சதமடித்தார். ராகுல் 129 ரன்களை குவித்தார். இவர்கள் அமைத்து கொடுத்த அடித்தளம், கோலி, ரிஷப், ஜடேஜாவின் பங்களிப்பால் முதல் இன்னிங்ஸில் 364 ரன்களை குவித்தது இந்திய அணி.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி, ஜோ ரூட்டின் அபாரமான சதத்தால்(180*) 391 ரன்களை குவித்தது. 

27 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ராகுல்(5) மற்றும் ரோஹித் சர்மா(21) இம்முறை ஏமாற்றமளித்தனர். கோலியும் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 55 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அந்த இக்கட்டான நிலையிலிருந்து, ரஹானேவும் புஜாராவும் இணைந்து இந்திய அணியை மீட்டனர்.

சீனியர் வீரர்களான ரஹானேவும் புஜாராவும் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்தனர். புஜாரா 45 ரன்னிலும், அரைசதம் அடித்த ரஹானே 51 ரன்னிலும் ஆட்டமிழக்க, ஜடேஜா 3 ரன்னிலும், ரிஷப் பண்ட் 22 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இஷாந்த் சர்மா 16 ரன்னில் ஆட்டமிழந்தார். 209 ரன்களுக்கு இந்திய அணி 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில், அதன்பின்னர் யாருமே எதிர்பார்த்திராத வகையில், ஷமியும் பும்ராவும் இணைந்து மிகச்சிறப்பாக பேட்டிங் ஆடி 9வது விக்கெட்டுக்கு 89 ரன்களை குவித்தனர். அபாரமாக அடித்து ஆடிய ஷமி அரைசதம் அடித்தார். பும்ரா அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடி 34 ரன்கள் அடித்தார்.

கடைசி நாள் ஆட்டத்தின் 2வது செசனில் ஒன்றரை ஓவர் ஆடியதுடன் இந்திய அணி 298 ரன்கள் அடித்த நிலையில், 2வது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 271 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 272 ரன்களை இலக்காக நிர்ணயித்தது,.

60 ஓவரில் 272 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி பும்ரா வீசிய முதல் ஓவரில் ரோரி பர்ன்ஸின் விக்கெட்டையும், ஷமி வீசிய 2வது ஓவரில் டோமினிக் சிப்ளியின் விக்கெட்டையும் இழந்தது. அதன்பின்னர் ஹசீப் ஹமீத்(9), பேர்ஸ்டோ((2), ஜோ ரூட்(33) ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் மொயின் அலி(13), சாம் கரன்(0) ஆகியோர் ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் ஆட்டத்தை டிரா செய்யும் முனைப்பில் களத்தில் நிலைத்து ஆடிவந்தார் ஜோஸ் பட்லர். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆலி ராபின்சனும் நன்றாக ஆடினார்.

ராபின்சனை 8 ரன்னில் வீழ்த்தி இந்தியாவை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றார் பும்ரா. அதன்பின்னர் பட்லர் மற்றும் ஆண்டர்சன் ஆகிய இருவரையும் சிராஜ் வீழ்த்த, இங்கிலாந்து அணி 120 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

1986 மற்றும் 2014ம் ஆண்டுக்கு பின்னர் 3வது முறையாக இந்திய அணி லண்டன் லார்ட்ஸில் டெஸ்ட் போட்டியை வென்று சாதனை படைத்துள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios