இந்தியா - வங்கதேசம் இடையேயான முதலிரண்டு டி20 போட்டிகளில் ஒரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றிருந்த நிலையில், கடைசி போட்டி நாக்பூரில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. 

முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 174 ரன்கள் அடித்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித்தும் தவானும் சோபிக்கவில்லை. ரோஹித் வெறும் 2 ரன்களிலும் தவான் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி 35 ரன்களுக்கே முதல் இரண்டு விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது. அதன்பின்னர் ராகுல்-ஷ்ரேயாஸ் ஐயர் ஜோடி அபாரமாக ஆடி ஸ்கோரை உயர்த்தியது. 

ராகுல் அதிரடியாக ஆட ஷ்ரேயாஸ் ஐயர் நிதானமாக ஆடினார். அரைசதம் அடித்த ராகுல் 35 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய ஷ்ரேயாஸ் ஐயர், அதன்பின்னர் சிக்ஸர்களாக விளாசி மிரட்டினார். மொத்தமாக 5 சிக்ஸர்களை விளாசிய ஷ்ரேயாஸ் ஐயர், வெறும் 33 பந்துகளில் 62 ரன்களை குவித்தார். வழக்கம்போல ரிஷப் பண்ட் இந்த போட்டியிலும் சொதப்பினார். 9 பந்துகளில் வெறும் 6 ரன்கள் மட்டுமே அடித்து ரிஷப் பண்ட் ஆட்டமிழந்தார். 

கடைசியில் மனீஷ் பாண்டே 13 பந்துகளில் 22 ரன்கள் அடிக்க இந்திய அணி 20 ஓவரில் 174 ரன்களை குவித்தது. 175 ரன்கள் என்பது வங்கதேச அணிக்கு சவாலான இலக்குதான். ஆனால் வங்கதேச அணியின் தொடக்க வீரர் முகமது நைம் அந்த இலக்கை எளிதாக்கினார். ஆரம்பத்தில் இருந்தே அடித்து ஆடிய நைம், ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று இந்திய அணியை அச்சுறுத்தினார். 

வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் 9 ரன்களிலும் சௌமியா சர்க்கார் ரன்னே எடுக்காமலும் தீபக் சாஹரின் பந்தில் ஆட்டமிழந்தனர். 12 ரன்களுக்கே வங்கதேச அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் நைமுடன் ஜோடி சேர்ந்த முகமது மிதுன், அதிரடியாக ஆடாவிட்டாலும், நைமிற்கு ஒத்துழைப்பு கொடுத்து விக்கெட்டை இழந்துவிடாமல் இருந்து பார்ட்னர்ஷிப் அமைத்தார். முகமது மிதுன் ஒருபுறம் நிற்க, மறுமுனையில் நைம் அடித்து ஆடி ஸ்கோர் செய்தார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 98 ரன்களை சேர்த்தது. 

நைம்-மிதுன் ஜோடி ஆடியபோது இந்திய அணி தோல்வியின் பாதையில் பயணித்தது. இந்த ஜோடியை பிரிக்காவிட்டால் இந்திய அணியின் தோல்வி உறுதியாகிவிடும் என்ற நிலையில், முகமது மிதுனை 27 ரன்களில் வீழ்த்தி பிரேக் கொடுத்தார் தீபக் சாஹர். 13வது ஓவரின் கடைசி பந்தில் மிதுனை தீபக் சாஹர் வீழ்த்த, அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே முஷ்ஃபிகுர் ரஹீமை ஷிவம் துபே வீழ்த்தினார். 16வது ஓவரின் மூன்றாவது பந்தில், இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக திகழ்ந்த முகமது நைமை 81 ரன்களில் வீழ்த்தி இந்திய அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றார் தீபக் சாஹர். 

தீபக் சாஹர் ஒவ்வொரு முறை பந்தை பெறும்போதும், அணிக்காக விக்கெட்டுகளை வீழ்த்தி கொடுத்து கொண்டேயிருந்தார். செட் பேட்ஸ்மேன் ஆட்டமிழந்ததை அடுத்து மற்ற வீரர்கள் அனைவரையும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற்றினர் இந்திய பவுலர்கள். குறிப்பாக தீபக் சாஹர் மிக அபாரமாக வீசினார். 18வது ஓவரின் கடைசி பந்தில் விக்கெட் போட்ட தீபக் சாஹர், கடைசி ஓவரின் முதலிரண்டு பந்துகளில் விக்கெட்டை வீழ்த்தி ஹாட்ரிக் போட்டார். 3.2 ஓவரில் வெறும் 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த தீபக் சாஹர், இந்திய அணியை வெற்றி பெற செய்தார். 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2-1 என தொடரை வென்றது. 

இந்த போட்டியில் ஷிவம் துபேவும் அபாரமாக பந்துவீசினார். 4 ஓவர்கள் வீசிய ஷிவம் துபே 30 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். கடைசி போட்டியில் ஆட்டநாயகன் விருதை வென்ற தீபக் சாஹர், தொடர் நாயகன் விருதையும் வென்று அசத்தினார்.