இந்தூரில் கடந்த 14ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி வெறும் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகிய இரண்டு முக்கிய வீரர்களும் ஏமாற்றமளித்தனர். 

ஆனால் மயன்க் அகர்வால் மிகச்சிறப்பாக ஆடி இரட்டை சதமடித்தார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஆடிய புஜாரா, ரஹானே ஆகியோர் அரைசதம் அடித்தனர். புஜாரா அதிரடியாக ஆடி 72 பந்துகளில் 54 ரன்களை விளாசினார். ரஹானே 86 ரன்களில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார். அதன்பின்னர் ஜடேஜா தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார். அஷ்வினுக்கு முன்பாகவே இறக்கிவிடப்பட்ட உமேஷ் யாதவ், வெறும் 10 பந்தில் 3 சிக்ஸர்கள் உட்பட 25 ரன்களை விளாசினார். இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 493 ரன்கள் அடித்திருந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் முடிந்தது. 

அத்துடன் முதல் இன்னிங்ஸை இந்திய அணி டிக்ளேர் செய்ததை அடுத்து, மூன்றாம் நாளான இன்றைய ஆட்டத்தில், வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. 343 ரன்கள் பின் தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது வங்கதேசம். முதல் இன்னிங்ஸில் தலா 6 ரன்களில் வெளியேறிய வங்கதேச தொடக்க வீரர்கள், இந்த இன்னிங்ஸிலும் சொல்லி வைத்தாற்போல தலா 6 ரன்களில் ஆட்டமிழந்தனர். 

இம்ருல் கைஸை உமேஷ் யாதவ் கிளீன் போல்டாக்க, ஷத்மான் இஸ்லாமை இஷாந்த் சர்மா போல்டாக்கி அனுப்பினார். அதற்கடுத்து வங்கதேச அணியின் கேப்டன் மோமினுல் ஹக் மற்றும் முகமது மிதுன் ஆகிய இருவரையும் முகமது ஷமி வீழ்த்தினார். 

இதையடுத்து அணியின் சீனியர் வீரர்களான முஷ்ஃபிகுர் ரஹீமும் மஹ்மதுல்லாவும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றனர். ஆனால் அவர்களை பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க ஷமி அனுமதிக்கவில்லை. உணவு இடைவேளைக்கு பின் மஹ்மதுல்லாவை ஷமி 15 ரன்களில் வீழ்த்திவிட்டார். அதன்பின்னர் களத்திற்கு வந்த லிட்டன் தாஸ் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தார். 39 பந்துகளில் 35 ரன்கள் அடித்த அவரை, அஷ்வின் வீழ்த்தினார். 

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய முஷ்ஃபிகுர் ரஹீம் அரைசதம் அடித்தார். முஷ்ஃபிகுருடன் இணைந்து மெஹிடி ஹாசனும் நன்றாக ஆடினார். இந்த ஜோடி வெற்றிக்கு அருகில் நெருங்கிய இந்திய அணியை கடுப்பேற்றியது. அந்த ஒரு விக்கெட்டை எடுத்துவிட்டால், இந்திய அணி அடுத்த சில ஓவர்களில் வெற்றியை பெற்றுவிடக்கூடிய நிலையில் இருந்தது. அப்படியான சூழலில் மெஹிடி ஹாசனை வீழ்த்தி பிரேக் கொடுத்தார் உமேஷ். 

அதன்பின்னர் தைஜுல் இஸ்லாமை ஷமி வீழ்த்த, நிலைத்து நின்று அரைசதம் அடித்து இந்திய அணியை டென்ஷனாக்கிய முஷ்ஃபிகுர் ரஹீமை அஷ்வின் வீழ்த்தினார். கடைசி விக்கெட்டையும் அஷ்வினே வீழ்த்த, வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 213 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 300 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது இந்திய அணி. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி பெற்றிருக்கும் புள்ளிகள் வெறும் 60 தான். இந்திய அணி பெற்றிருக்கும் புள்ளியை பெற மற்ற அணிகள் தொடர்ந்து வெற்றிகளை குவிக்க வேண்டும். அப்படியே குவித்தாலும் அதற்கு இணையாக இந்திய அணியும் வெற்றி பெறும் என்பதால் இந்திய அணியின் புள்ளியை நெருங்குவது மற்ற அணிகளுக்கு மிகவும் கடினமான விஷயம்.