இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸி., அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்தது. கடந்த 26ம் தேதி தொடங்கிய பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் வெறும் 195 ரன்களுக்கு சுருண்டது. ஆஸி., அணியில் ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்கவில்லை. அதிகபட்சமாக லபுஷேன் 48 ரன்கள் அடித்தார். இந்திய அணி சார்பில் முதல் இன்னிங்ஸில் அதிகபட்சமாக பும்ரா 4 விக்கெட்டுகளையும், அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, கேப்டன் ரஹானேவின் பொறுப்பான சதத்தால் முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் அடித்தது.

தொடக்க வீரர் மயன்க் அகர்வால் டக் அவுட்டாக, இந்த போட்டியில் அறிமுகமான இளம் தொடக்க வீரர் ஷுப்மன் கில் 45 ரன்கள் அடித்தார். புஜாரா, ஹனுமா விஹாரி ஆகியோர் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேப்டன் ரஹானே பொறுப்புடன் ஆடி சதமடித்தார். ரஹானேவிற்கு ஒத்துழைப்பு கொடுத்து அவருடன் இணைந்து 7வது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடிய ஜடேஜா அரைசதம் அடித்தார். 

ரஹானே 112 ரன்களுக்கு ரன் அவுட்டாகி வெளியேற, ஜடேஜா 57 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் அடித்தது. 131 ரன்கள் பின் தங்கிய 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸி., அணி வீரர்கள் 2வது இன்னிங்ஸிலும் பேட்டிங்கில் சொதப்பினர். இந்த இன்னிங்ஸிலும் ஆஸி., வீரர் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த ஆஸி., அணி 200 ரன்களுக்கு சுருண்டது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கிறிஸ் கிரீன் அதிகபட்சமாக 45 ரன்கள் அடித்தார். தொடக்க வீரர் மேத்யூ வேட் 40 ரன்கள் அடித்தார். மற்ற அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஆஸி., அணியின் நட்சத்திர வீரர்கள் ஸ்மித் 8 ரன்னிலும், லபுஷேன் 28 ரன்னிலும் ஆட்டமிழக்க, கேப்டன் டிம் பெய்ன் வெறும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து 200 ரன்களுக்கு ஆஸி., அணி சுருண்டதால், இந்திய அணியின் வெற்றிக்கு வெறும் 69 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. எளிய இலக்கை விரட்டிய இந்திய அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் இந்த இன்னிங்ஸிலும் ஏமாற்றமளித்து வெறும் ஐந்து ரன்களுக்கு நடையை கட்ட, புஜாராவும் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் தொடக்க வீரர் ஷுப்மன் கில்லும் கேப்டன் ரஹானேவும் இணைந்து போட்டியை முடித்துவைத்தனர். கில் ஆட்டமிழக்காமல் 33 ரன்களும், ரஹானே ஆட்டமிழக்காமல் 28 ரன்களும் அடித்து இலக்கை எட்டினர்.

இதையடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என சமனடைந்துள்ளது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக, சதமடித்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த கேப்டன் ரஹானே  தேர்வு செய்யப்பட்டார்.