ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 352 ரன்களை குவித்தது. தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் தவான் இணைந்து நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 127 ரன்களை குவித்தனர். ரோஹித் அரைசதம் அடித்து அவுட்டாக, தவானும் கோலியும் இணைந்து சிறப்பாக ஆடினர்.

தவான் அதிரடியாக ஆட, கோலி அவருக்கு சிங்கிள் தட்டி கொடுத்தார். அபாரமாக ஆடி சதமடித்த தவான், 117 ரன்களில் ஆட்டமிழந்தார். 37வது ஓவரில் தவான் ஆட்டமிழந்ததால், நான்காம் வரிசையில் ஹர்திக் பாண்டியா இறக்கப்பட்டார். தவான் ஆட்டமிழந்த பிறகு, கடைசி 14 ஓவர்கள் இருந்த நிலையில், கடைசி ஓவர்களை அதிரடியாக ஆடக்கூடிய ஹர்திக் பாண்டியா இறக்கப்பட்டார். அவரும் அவர் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையை காப்பாற்றினார். 27 பந்துகள் மட்டுமே ஆடி 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 48 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின்னர் கோலி, தோனி, கேஎல் ராகுல் ஆகியோர் அதிரடியாக அடித்து ஆடி ரன்களை குவித்தனர். கடைசி ஓவரில் தோனியும் கோலியும் அவுட்டாக, கடைசி ஓவரில் களத்திற்கு வந்த ராகுல், 3 பந்துகளில் 11 ரன்களை அடித்தார் ராகுல். ரோஹித், தவான், கோலி, ஹர்திக், தோனி, ராகுல் ஆகிய அனைவரின் அதிரடியான ஆட்டத்தாலும் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 352 ரன்களை குவித்தது. 

353 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் ஃபின்ச்சும் வார்னரும் சிறப்பாக தொடங்கினர். வார்னர் நிதானமாக ஆட, ஃபின்ச் அதிரடியாக ஆடி ரன்களை சேர்த்தார். ஆனால் இரண்டு ரன்கள் ஓட நினைத்து 36 ரன்களில் தேவையில்லாமல் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் வார்னரும் ஸ்மித்தும் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தொடக்கம் முதலே தனது வழக்கமான அதிரடி இன்னிங்ஸை ஆடமுடியாமல் திணறிய வார்னர், அரைசதம் கடந்த மாத்திரத்தில் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். 84 பந்துகள் பேட்டிங் ஆடி வெறும் 56 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

அதன்பின்னர் ஸ்மித்தும் அரைசதம் கடந்தார். ஆனாலும் வெற்றிக்கு தேவையான ரன்ரேட் 8க்கு அதிகமாகவே இருந்ததால் ஆஸ்திரேலிய வீரர்கள் மீது அழுத்தம் இருந்துகொண்டே இருந்தது. உஸ்மான் கவாஜா 42 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் வந்த மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடினார். ஸ்மித் அரைசதத்துடன் ஆடிக்கொண்டிருக்க, மேக்ஸ்வெல் மறுமுனையில் பவுண்டரிகளை அடித்து தெறிக்கவிட்டார். ஸ்மித் 78 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து வழக்கம்போலவே தனது விக்கெட்டை சாஹலிடம் இழந்தார். அதன்பின்னர் அலெக்ஸ் கேரி அதிரடியாக ஆடினாலும் சீரான இடைவெளியில் ஆஸ்திரேலிய அணி விக்கெட்டுகளை இழந்தது. இந்திய அணியின் வெற்றியும் உறுதியானது.

50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலிய அணி 316 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி 2 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாமிடத்திற்கு முன்னேறியது.