நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்த இந்திய அணி, இரண்டாவது டெஸ்ட்டிலும் தோல்விக்கு அருகில் உள்ளது. 

கிறிஸ்ட்சர்ச்சில் நடந்துவரும் 2வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 242 ரன்கள் அடித்தது. பிரித்வி ஷா, புஜாரா, ஹனுமா விஹாரி ஆகிய மூவரும் அரைசதம் அடித்தனர். ஆனாலும் மூவரில் ஒருவர் கூட பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. அரைசதம் அடித்த இவர்கள் மூவருமே ஐம்பதுகளிலேயே ஆட்டமிழந்தனர். அதனால் இந்திய அணி 242 ரன்கள் மட்டுமே அடித்தது. 

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் டாம் லேதம் மட்டுமே அரைசதம் அடித்தார். ஆனால் அவரையும் 52 ரன்களிலேயே ஷமி வீழ்த்தினார். அவரை தவிர வேறு யாரும் அரைசதம் அடிக்கவில்லை. 

அந்த அணி 177 ரன்களுக்கே 8 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், ஜேமிசனும் நீல் வாக்னரும் இணைந்து சிறப்பாக ஆடினர். பவுலிங்கில் மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு குடைச்சல் கொடுத்தார் ஜேமிசன். ஜேமிசனும் வாக்னரும் இணைந்து 9வது விக்கெட்டுக்கு 51 ரன்களை சேர்த்தனர். வாக்னரை 21 ரன்களில் வீழ்த்தி இந்த ஜோடியை பிரித்த ஷமி, கடைசி விக்கெட்டாக ஜேமிசனையும் 49 ரன்களில் வீழ்த்தினார். இதையடுத்து நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. 

7 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் 3 ரன்களிலும் பிரித்வி ஷா 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கேப்டன் விராட் கோலி இம்முறையும் சரியாக ஆடாமல் ஏமாற்றமளித்தார். கோலி 14 ரன்களில் காலின் டி கிராண்ட் ஹோம் பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து 51 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டது இந்திய அணி. 

ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்ற புஜாராவுடன் அனுபவ வீரர் ரஹானே ஜோடி சேர்ந்தார். ஆனால் ரஹானே, ஒற்றை இலக்கத்தில் வெளியேற, அவரை தொடர்ந்து புஜாராவும் ஆட்டமிழந்தார். 24 ரன்களில் டிரெண்ட் போல்ட்டின் பந்தில் கிளீன் போல்டானார். இதற்கிடையே ரஹானாவின் விக்கெட்டுக்கு பிறகு நைட் வாட்ச்மேனாக இறக்கப்பட்ட உமேஷ் யாதவ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். 

Also Read - வேற யாரையும் வச்சு கற்பனை கூட பண்ணமுடியாத கேட்ச்.. அதுதான் நம்ம ஜடேஜா.. வியப்பில் ஆழ்த்தும் வீடியோ

இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 89 ரன்களுக்கே 6 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இரண்டாம் நாளான இன்றைய ஆட்ட முடிவில் ஹனுமா விஹாரியும் ரிஷப் பண்ட்டும் களத்தில் உள்ளனர். இவர்கள் இருவரும் மிகப்பெரிய இன்னிங்ஸ் ஆடினால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பிருக்கிறது. இவர்களும் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகும் பட்சத்தில் இந்திய அணியின் தோல்வி உறுதியாகிவிடும்.