தியோதர் டிராபி தொடரின் முதல் போட்டி இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகளுக்கு இடையே நடந்துவருகிறது. 

ஹனுமா விஹாரி தலைமையிலான இந்தியா ஏ அணி மற்றும் பார்த்திவ் படேல் தலைமையிலான இந்தியா பி அணி ஆகிய இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி ராஞ்சியில் இன்று காலை எட்டே முக்கால் மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி, இந்தியா பி அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் பிரியங்க் பன்சால் ஆகிய இருவரும் களமிறங்கினர். பிரியங்க் பன்சால் 3 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் கெய்க்வாட்டுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜோடி சேர்ந்தார். 

இவர்கள் இருவரும் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்துக்கொண்டிருந்த நிலையில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கெய்க்வாட்டுடன் தமிழ்நாடு வீரர் பாபா அபரஜித் ஜோடி சேர்ந்தார். பாபா விஜய் ஹசாரேவில் அபாரமாக ஆடியிருந்தார். இந்த போட்டியிலும் கெய்க்வாட்டுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பாக ஆடினார்.

கெய்க்வாட்-பாபா அபரஜித் ஜோடி பொறுப்புடன் ஆடி இந்தியா ஏ அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பாக ஆடிய கெய்க்வாட் சதமடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு கெய்க்வாட்டும் பாபா அபரஜித்தும் இணைந்து 158 ரன்களை சேர்த்தனர். சதமடித்த கெய்க்வாட் 113 ரன்களில் அஷ்வினின் பந்தில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் கேதர் ஜாதவையும் 5 ரன்களில் அஷ்வின் வீழ்த்தினார். 

40 ஓவர்களை கடந்ததும் அடித்து ஆடினார் பாபா அபரஜித். அவருடன் இணைந்து விஜய் சங்கரும் அடித்து ஆடினார். கெய்க்வாட்டை தொடர்ந்து தமிழ்நாட்டு வீரரான பாபா அபரஜித்தும் சதமடித்தார். ஆனால் அவர் சதமடித்த மாத்திரத்திலேயே 101 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் கடைசி ஓவர்களில் விஜய் சங்கரும் கிருஷ்ணப்பா கௌதமும் அடித்து ஆடி ஸ்கோரை உயர்த்தினர். விஜய் சங்கர் 16 பந்துகளில் 26 ரன்கள் அடித்து இன்னிங்ஸின் கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். கிருஷ்ணப்பா கௌதம் 8 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்தார். 

இதையடுத்து இந்தியா பி அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களை குவித்து, இந்தியா ஏ அணிக்கு 303 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.