தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடவுள்ள நிலையில், தென்னாப்பிரிக்க ஏ அணி இந்தியா ஏ அணியுடன் ஆடிவருகிறது. 

இதில் 5 போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இந்தியா ஏ அணி வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டி நேற்று நடந்தது. ஒருநாள் தொடர் நடந்துவரும் திருவனந்தபுரத்தில் மழை பெய்துவருவதால் ஒரு போட்டி கூட 50 ஓவர் போட்டியாக நடக்கவில்லை. 

நேற்று நடந்த போட்டியும் 30 ஓவர்களாக குறைக்கப்பட்டு நடத்தப்பட்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க ஏ அணி 30 ஓவர் முடிவில் 207 ரன்கள் அடித்தது. 208 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய இந்தியா ஏ அணியின் தொடக்க வீரர்களாக கெய்க்வாட்டும் இஷான் கிஷானும் இறங்கினர். 

கெய்க்வாட் ஒரு ரன்னிலும் ரிக்கி பூய் ரன்னே எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். 5 ரன்களுக்கே இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், நான்காம் வரிசையில் க்ருணல் பாண்டியா இறக்கப்பட்டார். அவரும் சோபிக்கவில்லை. க்ருணல் 13 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின்னர் களத்திற்கு வந்த கேப்டன் மனீஷ் பாண்டே அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். 

மனீஷ் பாண்டே அதிரடியாக ஆடிக்கொண்டிருக்க, நிதிஷ் ராணா 13 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். மனீஷ் பாண்டேவிற்கு ஒத்துழைப்பு கொடுத்து ஷிவம் துபே அதிரடியாக ஆடி ரன்களை குவித்தார். அதிரடியாக ஆடிய மனீஷ் பாண்டே அரைசதம் அடித்தார். 59 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 81 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். ஆனால் அவரது அதிரடியால் இந்திய அணியின் வெற்றி எளிதானது. 28வது ஓவரிலேயே இலக்கை எட்டி இந்தியா ஏ அணி அபார வெற்றி பெற்றது.