தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. இந்த தொடர் செப்டம்பர் மாத மத்தியில் தொடங்குகிறது. 

இந்நிலையில், தென்னாப்பிரிக்க ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இந்தியா ஏ அணியுடன் 5 அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் மற்றும் 2 அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் ஆடிவருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. 

திருவனந்தபுரத்தில் நடந்த இந்த போட்டி, மழையால் சற்று தாமதமாக தொடங்கியதால் 3 ஓவர்கள் குறைக்கப்பட்டு, 47 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய தொடக்க வீரர் ருத்துராஜ் கெய்க்வாட்டை தவிர மற்றவர்கள் ஓரளவிற்கு பங்களிப்பு செய்தனர். கில்(46 ரன்கள்), அன்மோல்ப்ரீத் சிங்(29 ரன்கள்), மனீஷ் பாண்டே(39 ரன்கள்), இஷான் கிஷான்(37 ரன்கள்) அடித்தனர். 

இந்தியா ஏ அணி, 36 ஓவரில் 206 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில், அதன்பின்னர் ஷிவம் துபேவும் அக்ஸர் படேலும் ருத்ர தாண்டவம் ஆடினர். இருவரும் அதிரடியாக ஆடி ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். ஸ்பின் பவுலரான அக்ஸர் படேலின் பேட்டிங், நாளுக்கு நாள் மெருகேறிக்கொண்டே இருக்கிறது. இருவருமே அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தனர். ஷிவம் துபே 60 பந்துகளில் 79 ரன்களையும் அக்ஸர் படேல் 36 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 60 ரன்களையும் குவித்தனர். இவர்களின் அதிரடியால் இந்தியா ஏ அணி, 47 ஓவர் முடிவில் 327 ரன்களை குவித்தது. 

328 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய தென்னாப்பிரிக்க ஏ அணியின் தொடக்க வீரர் ரீஸா ஹென்ரிக்ஸ் ஒருமுனையில் நிலைத்து நின்று சிறப்பாக ஆடிக்கொண்டிருக்க, மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தன. அபாரமாக ஆடி சதமடித்த ஹென்ரிக்ஸ், 110 ரன்களில் அக்ஸர் படேலின் பந்தில் ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழந்த பின்னர், க்ளாசன் மட்டுமே அரைசதம் அடித்தார். மற்ற யாருமே சரியாக ஆடவில்லை. இந்திய அணியின் சார்பில் சாஹல் அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய பவுலர்களின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்க ஏ அணி 45 ஓவரில் 258 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

இதையடுத்து இந்தியா ஏ அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.