Asianet News TamilAsianet News Tamil

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரா மீண்டும் அசத்திய இந்திய இளம் வீரர்கள்.. வெற்றியின் விளிம்பில் இந்தியா ஏ

வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரை வென்ற இந்தியா ஏ அணி, அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் வென்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றியின் விளிம்பில் உள்ளது. 

india a is going to win second unofficial test against west indies a
Author
West Indies, First Published Aug 3, 2019, 1:32 PM IST

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. அதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து இந்தியா ஏ அணி, வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடன் ஆடிவருகிறது. 

வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரை இந்தியா ஏ அணி வென்றது. இதையடுத்து அதிகாரப்பூர்வற்ற டெஸ்ட் தொடர் நடந்துவருகிறது. இதன் முதல் போட்டியிலும் இந்தியா ஏ அணிதான் வென்றது. இரண்டாவது போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி, முதல் இன்னிங்ஸில் 318 ரன்களை குவித்தது. ஆனால் இந்திய அணியில் பிரியங்க பன்சால் மற்றும் ஷிவம் துபே மட்டுமே அரைசதம் அடித்தனர். மற்ற வீரர்கள் யாருமே சரியாக ஆடாததால் இந்தியா ஏ அணி 190 ரன்களுக்கே முதல் இன்னிங்ஸில் ஆல் அவுட்டானது. 

இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி, 12 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. அதன்பின்னர் சுனில் அம்ப்ரிஸும் ப்ளாக்வுட்டும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர்.  இந்த பார்ட்னர்ஷிப்பை பிரிக்க பவுலர்களே திணறிய நிலையில், ப்ளாக்வுட்டின் விக்கெட்டை வீழ்த்தி பிரேக் கொடுத்தார் பார்ட் டைம் பவுலர் ஷிவம் துபே. அதன்பின்னர் அந்த அணி மீண்டும் மளமளவென விக்கெட்டுகளை இழந்து இரண்டாவது இன்னிங்ஸில் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

278 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா ஏ அணியின் தொடக்க வீரர்கள் பிரியங்க் பன்சால் மற்றும் மயன்க் அகர்வால் ஆகிய இருவரும் அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 150 ரன்களை சேர்த்தனர். பன்சால் 68 ரன்களிலும் மயன்க் அகர்வால் 81 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். விஹாரி ஒரு ரன்னில் வெளியேறி ஏமாற்றினார். 

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா ஏ அணி 3 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் அடித்துள்ளது. அன்மோல்ப்ரீத் சிங் மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் ஆகிய இருவரும் களத்தில் உள்ளனர். இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 93 ரன்கள் மட்டுமே தேவை என்பதால் இந்த போட்டியிலும் இந்தியா ஏ அணி வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios