ருதுராஜ் கெய்க்வாட் சதம், திலக் வர்மா அரைசதம் அடித்தும், கடைசி நேரத்தில் இலங்கை வெற்றி பெறும் நிலையில் இருந்தது. ஆனால், 48-வது ஓவரில் கேப்டன் சஹன் ஆராச்சிகேவின் விக்கெட்டை வீழ்த்திய அன்ஷுல் கம்போஜ், ஆட்டத்தின் போக்கையே மாற்றினார்.

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டியில், இலங்கை 'ஏ' அணிக்கு எதிராக இந்தியா 'ஏ' அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட் செய்த இந்தியா 'ஏ' அணி, ருதுராஜ் கெய்க்வாட்டின் சதத்தின் உதவியுடன் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்தது. 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை 'ஏ' அணி, 48.5 ஓவர்களில் 269 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இலங்கை கேப்டன் சஹன் ஆராச்சிகே 72 பந்துகளில் 74 ரன்கள் அடித்து, அணியை வெற்றிக்கு மிக அருகில் கொண்டு சென்றார். கடைசி மூன்று ஓவர்களில் இலங்கை அணிக்கு 17 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது, கையில் நான்கு விக்கெட்டுகள் இருந்தன. அப்போது களத்தில் கேப்டன் சஹன் மற்றும் 13 ரன்களுடன் வனிது சஹன் இருந்தனர். இதனால் இலங்கை எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், 48-வது ஓவரின் இரண்டாவது பந்தில், ஒரு துல்லியமான யார்க்கர் மூலம் கேப்டன் சஹன் ஆராச்சிகேவை அன்ஷுல் கம்போஜ் போல்டாக்க, ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. இதையடுத்து, கடைசி இரண்டு ஓவர்களில் இலங்கையின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. 49-வது ஓவரை வீசிய அர்ஷத் கான், வியாஸ்காந்தை (4) எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டாக்கினார். அடுத்த பந்திலேயே, கடைசி நம்பிக்கையாக இருந்த வனிது சஹன் (23) ரன் அவுட் ஆனார். ஐந்தாவது பந்தில், முகமது ஷிராஸ் பவுண்டரி அடிக்க முயன்றபோது, பவுண்டரி லைனில் விப்ராஜ் நிகம் அபாரமாகப் பறந்து கேட்ச் பிடித்தார். இந்தியா நம்ப முடியாத வெற்றியைப் பதிவு செய்தது.

Scroll to load tweet…

முன்னதாக, 278 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை 'ஏ' அணிக்கு, தொடக்க ஆட்டக்காரர்களான நிரோஷன் டிக்வெல்ல (47) மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ (45) முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்து வலுவான தொடக்கம் கொடுத்தனர். இருவரையும் ஆயுஷ் பதோனி வெளியேற்றி, இந்தியாவை மீண்டும் போட்டிக்குள் கொண்டு வந்தார். மிடில் ஆர்டரில் சதீர சமரவிக்ரமவும் (46) சிறப்பாகப் போராடினார். இந்தியா 'ஏ' சார்பில் அர்ஷத் கான், அனுகுல் ராய், ஆயுஷ் பதோனி, விப்ராஜ் நிகம் தலா இரண்டு விக்கெட்டுகளையும், அன்ஷுல் கம்போஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Scroll to load tweet…

முன்னதாக, டாஸ் வென்று பேட்டிங்கைத் தீர்மானித்த இந்தியா 'ஏ' அணி, ருதுராஜ் கெய்க்வாடின் (114 பந்துகளில் 101 ரன்கள்) சதம் மற்றும் கேப்டன் திலக் வர்மாவின் (97 பந்துகளில் 60 ரன்கள்) அரைசதத்தின் பலத்தில் ஒரு நல்ல ஸ்கோரை எட்டியது. தொடக்க ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி (12 பந்துகளில் 14 ரன்கள்) சோபிக்கத் தவறினார். பிரப்சிம்ரன் சிங் (2) ஏமாற்றமளித்த நிலையில், பிரியான்ஷ் ஆர்யா (32), ஆயுஷ் படோனி (18 பந்துகளில் 24 ரன்கள்) மற்றும் சுயான்ஷ் ஷெட்ஜே (14 பந்துகளில் 26* ரன்கள்) ஆகியோர் இந்தியாவுக்காக ஜொலித்தனர். தொடரின் அடுத்த போட்டியில் இந்தியா 'ஏ' அணி, ஆப்கானிஸ்தான் 'ஏ' அணியை வியாழக்கிழமை அன்று எதிர்கொள்ளும்.