இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பும்ரா, சிராஜ் வேகத்தில் எதிரணி பேட்ஸ்மேன்கள் நிலைகுலைந்தனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலாவது போட்டி குஜராத் அகமதாபாத்தில் இன்று தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெறும் 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அடுத்தடுத்து ஆட்டமிழந்த வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. ஆட்டத்தின் நான்காவது ஓவரில் சிராஜ் பந்தில் சந்தர்பால் (0) அவுட் ஆனார். இதன்பிறகு களமிறங்கிய ஜாம் கேம்பல் (8) பும்ராவின் வேகத்தில் வீழ்ந்தார். தொடர்ந்து பிரண்டன் கிங் (13), அலிக் அதனேஸ் (12) ஆகியோர் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழக்க வெஸ்ட் இண்டீஸ் 42/4 என பரிதவித்தது.
சாய் ஹோப் நல்ல பேட்டிங்
இதன்பிறகு கேப்டன் ரோஸ்டன் சேஸும், சாய் ஹோப்பும் இணைந்து அணியை ஓரளவு சரிவில் இருந்து மீட்டனர். நன்றாக விளையாடிய சாய் ஹோப் (26) குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 90/5 என இருந்தது. இதன்பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணியால் சரிவில் இருந்து மீள முடியவில்லை. கேப்டன் ரோஸ்டன் சேஸ் (24), காரி பியர் (11) அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் ஆல் அவுட்
கடைசியில் ஜஸ்டின் கிரீவ்ஸ் (32 ரன்) சூப்பராக விளையாடி அணியை 150 ரன்களை கடக்க வைத்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவரில் 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தன்னுடைய அசுர வேகம் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்த முகமது சிராஜ் 14 ஓவரில் 40 ரன் கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்தார். யார்க்கரில் மிரட்டிய ஜஸ்பிரித் பும்ரா 3 விக்கெட்டுகளை சாய்த்தார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பும்ரா, சிராஜ் சூப்பர் பவுலிங்
இந்திய அணியின் பந்துவீச்சு தரமாக இருந்தது. பிட்ச்சில் நன்றாக பவுன்ஸ் இருந்தபோதிலும் பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளத்தில் பும்ரா, சிராஜ் நன்றாக பந்துவீசினார்கள். இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
