உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் ஆடிவருகின்றன.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. தொடக்க வீரர்கள் ஃபகார் ஜமான் மற்றும் இமாம் உல் ஹக் ஆகிய இருவரும் அதிரடியாக தொடங்கினர். 

ரபாடா, இங்கிடி, கிறிஸ் மோரிஸ், ஃபெலுக்வாயோ என தென்னாப்பிரிக்க கேப்டன்  மாறி மாறி பந்துவீச வைத்தும் பலனில்லை. ஃபகாரும் இமாமும் பவுண்டரிகளை தெறிக்கவிட்டனர். கிறிஸ் மோரிஸ் வீசிய 12வது ஓவரில் ஃபகார் ஜமான் கொடுத்த கேட்ச்சை பிடித்துவிட்டு இம்ரான் தாஹிர் தனது பாணியில் வெறித்தனமாக ஓடியே கொண்டாடினார். ஆனால் ரீப்ளேவில் பந்து தரையில் பட்டது தெரிந்தது. இதையடுத்து ஃபகார் ஜமான் தப்பினார். 

ஆனால் மீண்டும் தாஹிரின் பந்திலேயே ஆட்டமிழந்தார் ஃபகார். ஃபாஸ்ட் பவுலர்களை பயன்படுத்தி பலன் இல்லாததால் இம்ரான் தாஹிரை இறக்கினார் டுப்ளெசிஸ். அதற்கு பலன் கிடைத்தது. தாஹிர் வீசிய 15வது ஓவரில் ஃபகார் ஜமான் 44 ரன்களில் ஆம்லாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தனது முந்தைய கொண்டாட்டம் ஏமாற்றத்தில் முடிய, இந்த முறை செமயாக ஓடி கொண்டாடினார் தாஹிர். ஃபகார் ஜமான் - இமாம் உல் ஹக் தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு 81 ரன்களை குவித்தது. 

இதையடுத்து இமாமுடன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். இமாம் உல் ஹக்கையும் அதே 44 ரன்களில் வீழ்த்தினார் தாஹிர். தாஹிரின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து நடையை கட்டினார் இமாம். பாகிஸ்தான் அணி 98 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.