இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான நான்காவது ஒருநாள் போட்டியில் மார்க் உட்டின் பந்தில் இமாம் உல் ஹக் கையில் காயம் ஏற்பட்டது. அவர் வலியால் துடித்தது காண்போரை பதறவைத்தது. 

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி முடிவில்லாமல் முடிந்த நிலையில், அடுத்த இரண்டு போட்டிகளை இங்கிலாந்து வென்றது. 

நான்காவது போட்டி நாட்டிங்காமில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, பாபர் அசாமின் அபார சதம், ஹஃபீஸ், ஃபகார் ஜமான் மற்றும் ஷோயப் மாலிக்கின் பொறுப்பான பேட்டிங்கால் 50 ஓவர் முடிவில் 340 ரன்களை குவித்தது. 

341 ரன்கள் என்ற இலக்கை ஜேசன் ராயின் அதிரடி சதம் மற்றும் பென் ஸ்டோக்ஸின் பொறுப்பான ஆட்டத்தால் கடைசி ஓவரில் எட்டி இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று 3-0 என தொடரை வென்றது. 

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் காயமடைந்தார். மார்க் உட் வீசிய 4வது ஓவரின் பந்தை புல் ஷாட் ஆட முயன்று பந்தை அடிக்காமல் விட்டார் இமாம். அந்த பந்து இமாமின் இடது முழங்கையில் பலமாக அடித்தது. வலியால் துடித்த இமாம், பேட்டை தூக்கி போட்டு ஸ்கொயர் லெக் திசையில் ஓடி கீழே விழுந்து கதறினார். அவரது கதறலே அவரது வலியை அனைவருக்கும் கடத்தியது. வலியால் துடித்த இமாம், அத்துடன் ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். கடைசியில் சில ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவர் களத்திற்கு வரவேண்டிய அவசியம் இருந்ததால் வந்து சில சிங்கிள்கள் மட்டும் ஆடினார். 

உலக கோப்பைக்கு 2 வாரங்களுக்கும் குறைவாகவே உள்ள நிலையில், பாகிஸ்தான் அணியின் முக்கியமான வீரரும் தொடக்க வீரருமான இமாம் உல் ஹக் காயமடைந்திருப்பது அந்த அணிக்கு பெரும் பாதிப்பு. உலக கோப்பைக்கு முன் இமாம் தேறிவிடுவாரா என்பதை பார்க்க வேண்டும். இல்லையெனில் அவர் ஆடுவது கடினம் என்பதால் பாகிஸ்தான் அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.